சிங்கப்பூர் கல்வி வளர்ச்சிக்கு $3.5 மில்லியன் உயில் எழுதிவைத்த ஆசிரியர்

சிங்கப்பூர் கல்வி வளர்ச்சிக்கு $3.5 மில்லியன் உயில் எழுதிவைத்த ஆசிரியர்

2 mins read
f6cf27ed-cc05-4a79-b1b2-979ba4850298
த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் (எஸ்டிஎஸ்பிஎம்எஃப்) பொது மேலாளர் டே வீ லெங் (வலக்கோடி), மறைந்த ஆசிரியர் விக்டர் லீயின் உயில் நிறைவேற்றுபவர்களிடமிருந்து $500,000க்கான காசோலையைப் பெற்றுக்கொள்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

காலஞ்சென்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விக்டர் லீ, சிங்கப்பூரில் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமது உயில் மூலம் $3.5 மில்லியன் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார். 

த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதி (எஸ்டிஎஸ்பிஎம்எஃப்), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) ஆகிய மூன்று அமைப்புகளுக்கு இந்த நிதி பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது 70வது வயதில் காலமான திரு லீ, ஹுவா சொங் கல்விநிலையம், புக்கிட் பாஞ்சாங் அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 

சிங்கப்பூரில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காகத் தமது சொத்தில் 70 விழுக்காட்டுப் பங்கை இந்த அமைப்புகளுக்கு வழங்க அவர் உயில் எழுதி வைத்திருந்தார். 

அதன்படி, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற நிகழ்வில் விக்டர் லீயின் உயில் நிறைவேற்றுபவர்கள் மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் நன்கொடைகளுக்கான காசோலைகளை ஒப்படைத்தனர்.

அவரது உயிலின்படி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார், இளையர்களின் பள்ளித் தேவைகளுக்கு உதவும் ‘எஸ்டிஎஸ்பிஎம்எஃப்‘ நிதிக்கு $500,000 வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றிய தமது தந்தை லீ ஷெங் லீயின் நினைவாக, என்யுஎஸ், என்டியு ஆகிய இரண்டிற்கும் தலா $1.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விக்டர் லீயின் உயில் நிறைவேற்றுபவர்களில் ஒருவரான மாக் கிம் டெர்ங்,  ‘‘விக்டர் லீயின் தந்தை சீனா, சிச்சுவானில் வளர்ந்தபோது வறுமையால் எதிர்கொண்ட சிரமங்களே இந்த நற்செயலுக்குத் தூண்டுதலாக அமைந்தது,’’  என்று கூறினார்.

இந்த உதவிக்கு நன்றி தெரிவித்த ‘எஸ்டிஎஸ்பிஎம்எஃப்’ நிதியின் பொது மேலாளர் டே வீ லெங், தினசரி பள்ளிச் செலவுகளுக்குச் சிரமப்படும் மாணவர்களின் கல்விப் பயணத்தில் விக்டர் லீயின் கொடை ஒரு அர்த்தமுள்ள முதலீடு என்றார்.

குறிப்புச் சொற்கள்
கல்வி உதவித் தொகைசிங்கப்பூர்நன்கொடைஆசிரியர்