ஐஎஸ்ஐஎஸ் போராளி ஒருவரைத் திருமணம் செய்தே தீரவேண்டும் என விரும்பிய சிங்கப்பூரைச் சேர்ந்த 15 வயது மாணவி, அந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களில் குறைந்தது எட்டுப் பேருடன் இணையக் காதலில் ஈடுபட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் பதின்ம வயதுப் பெண் அவர்.
பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஸில் இணைந்து போரிடுவதற்காக சிரியா செல்ல பணம் சேமிக்க நினைத்தார் அந்தப் பெண்.
அந்த அமைப்பை ஆதரிக்கும் நோக்கில் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு, தன் மகன்களை அந்த இயக்கத்திற்கான போராளிகளாக வளர்க்கவும் அவர் விரும்பினார்.
தீவிரவாதச் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பித்தது.
உரிய அனுமதியின்றி அவர் சிங்கப்பூரைவிட்டு வெளியே செல்லவோ சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவோ முடியாது.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதல் பதின்ம வயதுப் பெண் அவர் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தது.
உலகெங்கும் பதின்மவயதுப் பெண்கள் சிலர் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளைத் திருமணம் செய்ய விரும்பும் போக்கை இது எடுத்துக்காட்டுவதாக அத்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் ஏற்பட்ட மிரட்டல் ஓய்ந்தபாடில்லை என்று குறிப்பிட்ட அத்துறை, இணைய மிரட்டலாலும் ஆதரவாளர் கட்டமைப்பாலும் உலகப் பங்காளிகளாலும் அந்த மிரட்டல் தொடர்ந்து நிலவுவதாகக் கூறியது.
இவ்வாண்டு மார்ச் மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட 17 வயது ஆடவர் குறித்தும் அது தகவல் வெளியிட்டது.
மாருஃப் பள்ளிவாசலில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், இளையர்களின் இத்தகைய போக்கு கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.