மிகச் சிறந்த நிலையில் சிங்கப்பூர் - தாய்லாந்து உறவு: பிரதமர் வோங்

மிகச் சிறந்த நிலையில் சிங்கப்பூர் - தாய்லாந்து உறவு: பிரதமர் வோங்

2 mins read
4c37deec-8e28-4e11-b08e-10b360f01a53
பேங்காக்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் புதன்கிழமை (செப்டம்பர் 2) நடைபெற்ற சிங்கப்பூர்-தாய்லாந்து தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில் தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுலுடன் பிரதமர் லாரன்ஸ் வோங் சந்தித்தார். - படம்: தாய்லாந்து பிரதமர் அலுவலகம்
Google News Preferred Icon

பேங்காக்: சிங்கப்பூர் - தாய்லாந்து உறவு மிகச் சிறந்த நிலையில் இருப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். மேலும், ஆசியான் கூட்டமைப்புக்கான பல்லாண்டுத் திட்டத்தை இருதரப்பும் வகுக்கும் என்றும் 2027ல் சிங்கப்பூரும், 2028ல் தாய்லாந்தும் இவ்வட்டாரக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் என்றும் அவர் கூறினார்.

பதினோர் ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு புதன்கிழமை (செப்டம்பர் 2) பேங்காக்கில் நடைபெற்ற சிங்கப்பூர்-தாய்லாந்து தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பில், தாய்லாந்து பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுலுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் பேசினார்.

இரு நாடுகளின் மாறிவரும் தேவைகளுக்கும் முன்னுரிமைகளுக்கும் ஏற்ப தங்களின் பங்காளித்துவம் தொடர்ந்து வளர்ந்து வருவதாக பிரதமர் வோங் கூறினார். உணவு, எரிசக்தி பாதுகாப்பு, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), நேரடித் தொடர்பு ஆகியவை இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கியத் துறைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நமது இருதரப்பு உறவுகள் மிகச் சிறந்த நிலையில் உள்ளன. தலைமைத்துவ நிலையில் நிலவும் உயர் அளவிலான நம்பிக்கை மற்றும் நல்லுறவு, அத்துடன் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நிறுவன ரீதியான பிணைப்புகள் ஆகியவற்றால் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரும் தாய்லாந்தும் “வலுவான, ஒன்றுபட்ட ஆசியான் கூட்டமைப்பில் பொதுவான அக்கறை கொண்ட, ஒருமித்த எண்ணம் கொண்ட பங்காளிகள்,” என்று கூறிய அவர், 11 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்தக் கூட்டமைப்பிற்கான பல்லாண்டுகால செயல்திட்டத்தை வகுக்க இருதரப்பும் நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

“தொடர்ச்சியான தலைமைப் பதவிக் காலங்களில், குறிப்பாக, நீடித்த முயற்சி தேவைப்படும் முன்னெடுப்புகளில் இணைந்து செயல்பட இது நமக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது,” என்று பிரதமர் வோங் கூறினார்.

“அவ்வாறு செய்வதன் மூலம், முக்கியமான முயற்சிகளின் வேகத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். மேலும், நமது வட்டாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் அதிக முன்னேற்றம் அடைய முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

உணவுப் பாதுகாப்புத் துறையில், உணவு உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் உணவு விநியோகத் தொடரை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து இரு தரப்பினரும் புதன்கிழமை விவாதித்தனர்.

செயற்கை நுண்ணறிவு என்பது மற்றொரு வளர்ந்துவரும் துறையாகும். இதில், உற்பத்தி, சுகாதாரம், சுற்றுலா போன்ற தொழில்துறைகளுக்கான நடைமுறைப் பயன்பாடுகளை உருவாக்கி, அவற்றை இரு நாடுகளிலும் செயல்படுத்துவதன் மூலம் சிங்கப்பூர் தாய்லாந்துடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
செய்தியாளர்பாதுகாப்புத் துறைநம்பிக்கை