சிங்கப்பூர் தன் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவாகச் சிந்திப்பதும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் புத்தாக்கங்கள் ஏற்படுத்த விரும்புவதும் தன்னைச் சிங்கப்பூருக்கு ஈர்த்ததாகக் கேட்ஸ் அறக்கட்டளைத் தலைவர் பில் கேட்ஸ் கூறியுள்ளார்.
கரையோரப் பூந்தோட்டத்தில் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் மே 6ஆம் தேதி பிற்பகல் ஏற்பாடுசெய்த ‘ஏடிஎக்ஸ் இன்ஸ்பையர்’ (ATxInspire) கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகுச் சிங்கப்பூருக்கு வந்துள்ள திரு கேட்ஸ், கேட்ஸ் அறக்கட்டளை சிங்கப்பூரில் ஓர் அலுவலகத்தைத் திறக்கும் என மே 5ஆம் தேதி அறிவித்திருந்தார். அம்முயற்சிக்குப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் துணைபுரியும்.
“சிங்கப்பூர் தன் சொந்த தேவைகளையும் தாண்டி ஆசியாவில் நிலவும் சவால்களுக்கும் தீர்வுகாண ஆய்வுகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது. இங்கிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் இன்னும் கடினமான சூழல்கொண்ட மற்ற இடங்களுக்கும் பொருந்தும்,” என்றார் திரு கேட்ஸ்.
“உலக அரசியல் நிலவரம் சற்று கடினமானதாக இருந்தாலும் புத்தாக்கங்கள் விரைவடைகின்றன. லாப நோக்கமுடைய நிறுவனங்களைத் தொடங்குவதிலும் சரி, சுகாதாரம் போன்ற விவகாரங்களில் அறக்கொடை முனைப்புகளை முன்னெடுப்பதிலும் சரி, சிங்கப்பூர் மையப் பங்கை ஆற்றுவதைக் காண்பதில் உற்சாகமடைகிறேன்,” என்றார் திரு கேட்ஸ்.
சிங்கப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அறக்கொடை வெகுவாக வளரவுள்ளதாகவும் இங்கு நிறைய குடும்ப அலுவலகங்களும் வாய்ப்புகளும் இருப்பதாகவும் அவர் கூறினார். எரிசக்தி தொடர்பாக தாம் தெமாசெக் உடன் வைத்துள்ள வலுவான பந்தத்தையும் அவர் பாராட்டினார்.
கருத்தரங்குக்குப் பல இளம் தலைவர்கள், தொழில்முனைவர்கள், நிபுணர்களும் வந்து திரு கேட்சிடம் கேள்விகள் எழுப்பினர்.
வறுமைமிகுந்த நாடுகளில் ஒவ்வொருவருக்கும் செயற்கை நுண்ணறிவு மருத்துவரை அறிமுகப்படுத்த விரும்புவதாக திரு கேட்ஸ் கூறியது தனக்குப் பிடித்திருந்ததாகக் கூறினார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழக (எஸ்எம்யு) மாணவர் நிப்ராஸ் அப்துல்லா, 23. சேட்ஜிபிடி 4.0 வந்ததால் இது சாத்தியமடைந்துள்ளது எனக் கூறியிருந்தார் திரு கேட்ஸ்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால் அதற்கு முதலில் ஒவ்வொருவருக்கும் கைப்பேசி, தொடர்புக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்,” என்றார் நிப்ராஸ்.
“பல நிறுவனங்களும் உலகின் அதிமுக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதாகத் திரு கேட்ஸ் கூறியது என்னைச் சிந்திக்கவைத்தது,” என்றார் எஸ்எம்யு மாணவர் கீகன் ரவிந்திரன், 23. தடுப்பூசி விலையைக் குறைக்க முயற்சிகள் எடுப்பதாகக் கூறியிருந்தார் திரு கேட்ஸ்.
“ஏழை நாடுகளில் மட்டும் உள்ள நோய் மலேரியா. இந்நாடுகளிடம் அப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உத்திகள் இல்லை. நான் 1990களில் $30 மில்லியன் தந்தபோது உலகிலேயே மலேரியா ஆய்வுக்கு ஆக அதிகமான நிதி வழங்கியது நான்தான்!” எனக் கூறியிருந்தார் திரு கேட்ஸ்.
எஸ்யுடிடி, என்டியு, என்யுஎஸ் சார்ந்த நான்கு மாணவ அணிகள் திரு கேட்சிடம் உடற்குறையுள்ளோர், உயிரியல், தொடர்பு சார்ந்த தம் புத்தாக்கத் தீர்வுகளையும் படைத்தனர்.
‘லாப நோக்கில் மட்டும் இயங்கக் கூடாது’
லாப நோக்கிலேயே செயல்படும் உலகில் வறுமைமிகுந்த நாடுகள் பின்தங்கிவிட்டன என்றும் அவற்றுக்குக் கட்டுப்படியான விலையில் சுகாதாரத் தீர்வுகள் வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார் திரு கேட்ஸ்.
“2000ல் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இறந்தனர். மனிதநேயத்தோடு மற்ற அமைப்புகளுடன் இணைந்து குறைந்த விலையிலான தடுப்பூசிகள், சத்துள்ள உணவு போன்றவற்றில் நாம் ஆராய்ச்சி மேற்கொண்டதால் இன்று 5 மில்லியனுக்குக் குறைவான சிறுவர்கள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகளில் இந்த இறப்பு விகிதத்தை இன்னும் பாதியளவு குறைப்போம்,” என்றார் திரு கேட்ஸ்.
இளம் தொழில்முனைவர்களுக்கு ஊக்கம்
“நீங்கள் வேறு யாரும் செய்யாததைக் கண்டுபிடிக்க வேண்டும். பல விஷயங்களைச் சேட்ஜிபிடியிலேயே ஏற்கெனவே நன்றாகச் செய்ய முடியும். இன்று எண்ணற்ற நிறுவனங்களும் உள்ளன,” எனத் தொழில்முனைவர்களுக்கு அறிவுறுத்தினார் திரு கேட்ஸ்.
“இன்றைய உலகம் தொழில்முனைவர்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறது. நிறைய முதலீட்டாளர்கள் உள்ளன,” என்றும் கூறினார் திரு கேட்ஸ்.