உலகளவில் ஆக மகிழ்ச்சியான நகரங்களுக்கான பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தைக் கோப்பன்ஹேகனும் இரண்டாம் இடத்தை சூரிக்கும் பிடித்தன.
முதல் பத்து இடங்களில் மேலும் இரண்டு ஆசிய நகரங்கள் வந்தன. சோல் ஆறாவது இடத்திலும் தைப்பே எட்டாவது இடத்திலும் வந்தன.
வாழ்க்கைத்தரக் கழகத்தின் மகிழ்ச்சியான நகரங்களுக்கான ஆக அண்மைய ஆய்வில் அந்தத் தகவல்கள் வெளியாகின. குடிமக்களின் மகிழ்ச்சிக்கு நேரடியாகப் பங்களிக்கும் 6 பிரிவுகளின்கீழ் உள்ள 82 காரணிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குடிமக்கள், ஆட்சிமுறை, சுற்றுச்சூழல், பொருளியல், சுகாதாரம், நடமாட்டம் ஆகியவை அந்த ஆறு பிரிவுகள்.
மொத்தம் 979 புள்ளிகளைப் பெற்ற சிங்கப்பூர், பொருளியல் செழுமை, நிர்வாகம், நகர புத்தாக்கம் ஆகியவற்றுக்கு அனைத்துலக கலங்கரை விளக்கமாக உள்ளது என்று ஆய்வு குறிப்பிட்டது.
கல்வியும் புத்தாக்கவும் சிங்கப்பூரின் வெற்றிக்கு மூல காரணங்கள். சிங்கப்பூரின் பல்கலைக்கழகங்கள் உலகப் பட்டியலின் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளதை ஆய்வு சுட்டியது.
சிங்கப்பூரில் அனைத்துலக பிணைப்பும் கடைப்பிடிக்கப்படுவதாகச் சொன்ன ஆய்வு, மக்கள்தொகையில் 63 விழுக்காட்டினர் குறைந்தது ஓர் அந்நிய மொழியைப் பேசுகின்றனர் என்றும் 55 விழுக்காட்டினர் மின்னிலக்கத் திறன்களைக் கொண்டுள்ளனர் என்றும் சொன்னது.
நல்ல ஆட்சிமுறையும் வெளிப்படைத்தன்மையும் சிங்கப்பூரின் தலைசிறந்த நிர்வாகத்தை வடிவமைக்கின்றன என்ற ஆய்வு, குடிமக்களின் ஈடுபாடு அதிகம் என்றது.
தொடர்புடைய செய்திகள்
மகிழ்ச்சியான நகரங்களைத் தரவரிசைப்படுத்துவதற்கான பிரிவுகளில் புதிதாகச் சுகாதாரம் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் மனநலம், ஊட்டச்சத்து, வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை கருத்தில்கொள்ளப்பட்டன.
அனைத்துலக மருத்துவ காப்புறுதி, ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு 2.8 மருத்துவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு எளிதில் கிடைக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வு குறிப்பிட்டது.
ஆயிரம் குடியிருப்பாளர்களுக்குப் பதிவான பொது வன்முறை சம்பவங்களின் விகிதம் 3.31 என்ற ஆய்வு, குற்ற விகிதம் குறைவாக இருப்பதைக் குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் நடமாட்டம், போக்குவரத்து உள்கடமைப்பு உலகில் அதிநவீன கட்டமைப்புகளில் ஒன்று எனவும் ஆய்வு சொன்னது. சிங்கப்பூர் நீடித்த நிலைத்தன்மை தெரிவுகளுக்கு முதலிடம் கொடுப்பதையும் அது சுட்டியது.
லண்டனை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைத்தர கழகம் ஆறாவது முறையாக மகிழ்ச்சியான நகரங்களுக்கான ஆய்வை வெளியிட்டுள்ளது.
குடிமக்களின் மகிழ்ச்சியை நீண்டகாலத்துக்கு கட்டிக்காப்பதில் எந்தவொரு தனிப்பட்ட நகரத்தையும் ஆகச் சிறந்தது என்று வகைப்படுத்திவிட முடியாது என்ற கழகம், பொன் நகரங்கள் என்ற குழுவையும் அடையாளம் கண்டது. அது உலகின் ஆக மகிழ்ச்சியான தளங்களை வரிசைப்படுத்துகிறது.
இவ்வாண்டு அத்தகைய 31 பொன் நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பொன் நகரங்களாக இடம்பெற்ற 37 நகரங்களில் சிங்கப்பூர் 34வது இடத்தைப் பிடித்தது.


