‘சிங்கப்பூர் கொடுத்த தகவலால் திரீ ஏரோஸ் இணை நிறுவனர் கைது’

1 mins read
b7767429-2c60-4fcd-8e1d-f01161b7f4cf
‘திரீ ஏரோஸ்’இன் இணை நிறுவனர் ஸு சு, சிங்கப்பூரில் நிறுவனக் கலைப்பாளர்களால் கண்காணிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: ஸு சு/எக்ஸ்

நிறுவனக் கலைப்பாளர்கள் அதிகபட்ச அளவில் நெருக்குதல் கொடுத்ததால், நொடித்துப்போன ‘திரீ ஏரோஸ்’ மின்னிலக்க நாணய முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸு சு சிங்கப்பூரில் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அந்த மின்னிலக்க நாணய முதலீட்டு நிதி நிறுவனத்தின் சொத்துகளைக் கண்டுபிடிப்பதன் தொடர்பில், பல மாதங்களாக நிறுவனக் கலைப்பாளர்கள் போராடி வந்தனர்.

அந்நிறுவனத்தை மூடுவதன் தொடர்பில் ஒத்துழைக்கத் தவறியதற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஒன்று அவருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனைக்கான உத்தரவைப் பிறப்பித்தது.

அதன் பிறகு சில நாள்களில், ஸு சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்ததாக செப்டம்பர் 29ஆம் தேதி நிறுவனக் கலைப்பாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததாக, அவ்விவகாரம் குறித்து அறிந்திருந்த சிலர் கூறினர்.

நிறுவனக் கலைப்பாளர்கள் சிங்கப்பூரில் ஸுவைக் கண்காணித்து வந்தததாகத் தகவல்கள் தெரிவித்தன.

யார்வுட் அவென்யூவில் உள்ள தமது பங்களாவில் அவர் வழக்கமாக மின்னிலக்க நாணய நிர்வாகிகளுடன் கூடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து விமான நிலையத்திற்குப் புறப்பட்ட கார் ஒன்றை அவர்கள் பின்தொடர்ந்ததாகத் தகவல்கள் கூறின.

ஸு அந்தக் காரில் இருக்கக்கூடும் என்று காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தைச் சென்றடைந்ததும் காவல்துறையினர் அவரைத் தடுத்துவைத்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

ஸு தடுத்துவைக்கப்பட்டாரா என்று கேட்டபோது, சிங்கப்பூர் அதிகாரிகள் செப்டம்பர் 29ஆம் தேதி பிற்பகல் மணி 2.50க்கு சாங்கி விமான நிலையத்தில் 36 வயது ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதை உறுதிசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்