தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் புத்தாக்கத் திறன்மிகுந்த நாடாக சிங்கப்பூர் தேர்வு

2 mins read
43332b00-3542-44d5-8ecf-83aa3d9ffd75
உலகின் ஆகச் சிறந்த புத்தாக்க நகரம் என்ற பெயரை அமெரிக்காவிடம் இருந்து சிங்கப்பூர் தட்டிச் சென்று உள்ளது. - கோப்புப் படம்: பிஸ்னெஸ் டைம்ஸ்

லாஸ் வேகாஸ்: உலகப் புத்தாக்கத் திறனில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்து உள்ளது.

குறிப்பாக, உலகின் ஆகச் சிறந்த புத்தாக்க நாடு என்ற பெயரை அமெரிக்காவிடம் இருந்து சிங்கப்பூர் தட்டிச் சென்று உள்ளது.

உலகப் புத்தாக்கத் தரப்பட்டியல் ஈராண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பயனீட்டாளர் வர்த்தகச் சங்கம் (CTA) என்னும் வர்த்தக அமைப்பு, புத்தாக்கத்தில் சிறந்த நாடுகளைத் தரப்படுத்தி அந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

உலகின் 74 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அதில் இடம்பெறும்.

இதற்கு முந்திய பட்டியல் 2023ஆம் ஆண்டு வெளியானபோது, சிங்கப்பூர் 15வது இடத்தில் இருந்தது.

இவ்வாண்டு உலகப் புத்தாக்க வெற்றியாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட 25 நாடுகளில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.

ஊழியரணியின் கல்வி நிலை, புதிய வர்த்தக உருவாக்க விகிதம் போன்ற விரிவான காரணிகளின் அடிப்படையில் நாடுகளின் புத்தாக்கத் திறன் ஆய்வு செய்யப்படுகிறது.

அதில் சிங்கப்பூர் முதலிடமும் அமெரிக்கா இரண்டாம் இடமும் பிடித்துள்ளன. நியூசிலாந்து, சுவீடன், சுவிட்சர்லாந்து போன்றவை அடுத்தடுத்த நிலைகளுக்குத் தேர்வாயின. புத்தாக்கத் திறன் மிகுந்த ஐந்து நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த நாடுகள் இவை.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சிஇஎஸ் தொழில்நுட்பக் கண்காட்சியில், உலகப் புத்தாக்க வெற்றியாளர் என்ற விருது சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 9) வழங்கப்பட்டது.

இதற்கு முன்னர் பயனீட்டாளர் மின்னணுவியல் காட்சி என்று அழைக்கப்பட்ட அந்தக் கண்காட்சி ஜனவரி 7 முதல் 10 வரை நான்கு நாள்கள் நடைபெறுகிறது.

தொழில்நுட்பப் புத்தாக்கத் திறனை நடைமுறைப்படுத்த ஒரு நாடு எந்த அளவுக்குச் சிறப்பான நிலையில் உள்ளது என்பதன் அடிப்படையில் நாடுகள் தேர்வு செய்யப்படுவதாக சிடிஏ கூறியது.

அதற்கு, நாடுகளின் அரசியல், பொருளியல், மக்கள்தொகைத் திறன்கள் போன்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அது தெரிவித்தது.

வர்த்தகச் சூழல் மீள்தன்மை மற்றும் தரவு வெளிப்படைத்தன்மை; அதன் சட்டச் சூழலின் புதுமைக்கு ஆதரவான தன்மை; தொழில் தொடங்கும் புதிய நிறுவனங்கள், சிறு வர்த்தகங்கள் மீதான அதன் நட்பு; நிறுவனங்களுக்கான அதன் வரிக் கொள்கைகள் என 16 பிரிவுகளில் நான்கில் சிங்கப்பூர் அதிக மதிப்பெண்களைப் பெற்றது.

அதன் பணியாளர்களின் இன மற்றும் புலம்பெயர்ந்த பன்முகத்தன்மை; தொலைசுகாதாரம் மற்றும் எல்லை தாண்டிய தரவு பரிமாற்றங்களுக்கான வெளிப்படையான தன்மை; அகண்ட அலைவரிசையின் வேகம் போன்ற பிற பிரிவுகளிலும் சிங்கப்பூர் நல்ல மதிப்பெண்களைப் பெற்றது.

குறிப்புச் சொற்கள்