கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான பயணத்தை அதிகரிக்க, மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமும் (எம்ஏஜி) சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் (எஸ்டிபி) தங்கள் உத்திபூர்வ பங்காளித்துவத்தைப் புதுப்பித்துள்ளன.
மலேசிய பயணிகளுக்கான ஓர் இடமாக சிங்கப்பூரின் ஈர்ப்புத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முக்கிய இடங்களில் பயணத்துறைச் செலவினங்களையும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கும் கூட்டுச் சந்தைப்படுத்தல் முயற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் ஆகியவற்றில் இந்த ஒத்துழைப்பு கவனம் செலுத்தும் என்று எம்ஏஜி பிப்ரவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“புதுப்பிக்கப்பட்ட பங்காளித்துவ உறவின் ஒரு பகுதியாக, எம்ஏஜி, எஸ்டிபி, மலேசியா ஏர்லைன்ஸ், ஃபயர்ஃபிளை விமானச் சிப்பந்திகள், கரையோரப் பூந்தோட்டம், சிங்கப்பூர் ராட்டினம், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவின் ‘சீ’ கடலடிக் காட்சியகம், யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர், மண்டாய் வனவிலங்குக் காப்பகம், ஐஸ்கிரீம் அரும்பொருளகம் உள்ளிட்ட சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலா இடங்களைப் பார்த்து ரசிக்கக்கூடிய சந்தைப்படுத்தல் பிரசாரங்களைத் தொடங்கும்,” என்று எம்ஏஜி கூறியது.
பங்காளித்துவ உறவின் மூன்றாம் ஆண்டைக் குறிக்கும் வகையில், இரு அமைப்புகளும் எம்ஏஜி வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூரில் பயண உறுதி அட்டை (போர்டிங் பாஸ்) சலுகைகள் உட்பட மேம்பட்ட பயணச் சலுகைகளை அறிமுகப்படுத்தும் என்று எம்ஏஜி மேலும் கூறியது.
எம்ஏஜி கட்டமைப்புக்குள் சிங்கப்பூரை ஒரு முக்கிய இடமாக மேலும் நிலைநிறுத்த, எஸ்டிபி உடனான தனது பங்காளித்துவத்தைத் தொடர்வதில் தமது நிறுவனம் மகிழ்ச்சியடைவதாக எம்ஏஜி தலைமை வர்த்தக அதிகாரி தர்செனிஷ் அரேசந்திரன் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் வேறுபட்ட விளம்பரங்களை வழங்குவதற்காக எம்ஏஜி உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் தங்கள் அமைப்பு மகிழ்ச்சியடைவதாக தென்கிழக்கு ஆசியாவின் எஸ்டிபி நிர்வாக இயக்குநர் டெரன்ஸ் வூன் கூறினார்.
“மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதில் நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். அங்கு அவர்கள் தனித்துவமான அனுபவங்களை ஆராய்ந்து, நமது துடிப்பான நகரத்தின் சிறப்பைக் கண்டறிய முடியும்,” என்று அவர் கூறினார் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.