சிங்கப்பூர், இவ்வாண்டின் முதல் காலாண்டில் சுற்றுப்பயணத் துறையில் $8.6 பில்லியன் வருவாயைப் பெற்றுள்ளது. முந்திய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 5.8 விழுக்காடு அதிகம். கடந்த ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட வருவாயின் மதிப்பு $8.1 பில்லியன்.
2026ன் முதல் காலாண்டில் சிங்கப்பூருக்கு வந்த அனைத்துலகச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2.9 விழுக்காடு உயர்ந்து 4.4 மில்லியனானது. ஓராண்டுக்கு முன்பு அது 4.3 மில்லியனாக இருந்தது. சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட தரவுகளில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூருக்கு வந்தோர் நன்றாகச் செலவிட்டதே வருவாய் உயர்வுக்குக் காரணம் என்று கழகம் தெரிவித்தது. உலக அளவில் நிச்சயமற்றதன்மை தொடர்வதால், இங்கு வரும் சுற்றுப்பயணிகளின் விகிதம் மிதமான நிலையை அடையக்கூடும் என்று அது சொன்னது.
காலாண்டு அடிப்படையில், இங்கு வந்த சுற்றுப்பயணிகள் செலவிட்ட தொகை 1.1 விழுக்காடு குறைந்தது.
சுற்றிப்பார்த்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றுக்குச் சுற்றுப்பயணிகள் செலவிட்ட தொகை ஆண்டு அடிப்படையில் 22.8 விழுக்காடு கூடுதலாகி $2 பில்லியன் ஆனது. கடைகளில் பொருள்கள் வாங்கியதால் கிடைத்த வருவாய் 7 விழுக்காடு அதிகரித்து $1.4 பில்லியன் ஆயிற்று.
ஒப்புநோக்க, உணவு-பானத் துறையில் கிடைத்த வருவாய் 1.9 விழுக்காடு குறைந்து $1.2 பில்லியன் ஆனது.
2026ன் முதல் காலாண்டில் சிங்கப்பூருக்குச் சுற்றுப்பயணத்துறையின் மூலம் அதிக வருவாயை ஈட்டித்தந்த நாடுகளின் பட்டியலில் சீனப் பெருநிலம் முதலிடத்தில் உள்ளது. சுற்றிப்பார்த்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தபோது முதல் காலாண்டில் கிடைத்த வருவாயில் அதன் பங்கு $1.3 பில்லியன்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 3.4 விழுக்காடு அதிகம்.
சீனப் பெருநிலத்திலிருந்து இங்கு வந்துசென்ற பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 2026ன் முதல் காலாண்டில் 9.9 விழுக்காடு அதிகரித்து 913,407ஆக இருந்தது.
கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த நாடுகளின் பட்டியலில் இந்தோனீசியாவுக்கு இரண்டாமிடம். அதன் மூலம் கிடைத்த வருவாய் $719.7 மில்லியன். இது, சென்ற ஆண்டைக் காட்டிலும் 0.5 விழுக்காடு குறைவு. சிங்கப்பூரின் சுற்றுப்பயணத் துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த முதல் ஐந்து நாடுகளில் அடுத்த மூன்று நிலைகளை ஆஸ்திரேலியா ($533.3 மில்லியன்), அமெரிக்கா ($465.7 மில்லியன்), இந்தியா ($374.1 மில்லியன்) ஆகியவை பிடித்தன.


