உலகின் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்துறைகளைச் சேர்ந்த மேலும் அதிகமான அதிகாரிகளுக்கு சிங்கப்பூர் பயிற்சி அளிக்க உள்ளது.
அந்த இரு துறைகளுக்கான புதிய பயிற்சித் திட்டங்கள் சிலவற்றை சிங்கப்பூர் தொடங்கி உள்ளதோடு மேலும் சில திட்டங்களை வகுத்து வருகிறது.
அந்தப் பயிற்சித் திட்டங்கள் அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்புக்கும் (ICAO) அனைத்துலக கடல்துறை அமைப்புக்கும் (IMO) ஆதரவு வழங்குவதாக தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்து உள்ளார்.
விமானப் போக்குவரத்து மற்றும் கடல்துறை மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக அந்தப் பயிற்சித் திட்டங்கள் விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயிற்சித் திட்டங்களில், வளர்ச்சி காணும் சிறு தீவு அரசாங்கங்கள் என்னும் (Sids) அமைப்பைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டமும் அடங்கும்.
அந்த அமைப்பில் பிற அரசாங்கங்களுடன் கரீபிய, பசிபிக் தீவுகளின் அரசாங்கங்களும் இடம்பெற்று உள்ளன.
சிங்கப்பூர் போன்ற சிறு தீவு அரசாங்கங்கள் விமானப் போக்குவரத்து மற்றும் கடல்துறைகளில் எதிர்கொள்ளும் தனித்துவ சவால்கள் மீது அந்தத் திட்டம் கவனம் செலத்தும்.
சிங்கப்பூரில் திங்கட்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற அனைத்துலக விமானப் போக்குவரத்து மற்றும் கடல்துறை கருத்தரங்கில் பங்கேற்று திரு சியாவ் உரையாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
முதல் பயிற்சித் திட்டம் கரீபியத் தீவு அரசாங்கங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று குறிப்பிட்ட அவர், பசிபிக் தீவு மற்றும் பிற சிறு தீவு அரசாங்க அதிகாரிகளுக்குரிய பயிற்சித் திட்டங்களுக்கான பாடத்ததிட்டம் வகுக்கப்பட்டு வருவதாகச் சொன்னார்.
விமானப் போக்குவரத்து, கடல்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயிற்றுநர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கி, வழங்குவதற்கான புதிய உலகளாவிய முயற்சிக்காக அந்த இரு துறைகளின் அனைத்துலக அமைப்புகளுடன் (ICAO, IMO) இணைந்து சிங்கப்பூர் பணியாற்றும் என்றும் திரு சியாவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒத்துழைப்பு, “விமானப் போக்குவரத்து, கடல்துறை ஆகியவற்றுக்கு இடையே அதிகரித்து வரும் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல்களையும், அவை எதிர்கொள்ளும் பொதுவான சவால்களையும் அங்கீகரிக்கிறது,” என்றும் அமைச்சர் கூறினார்.