மருந்துகள் மீதான வரி விதிப்பு குறித்து சிங்கப்பூர் அமெரிக்காவுடன் சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மருந்துகள் மீது வரி விதிக்க திட்டமிட்டபோதும், அது இன்னும் சிங்கப்பூர் மீது அமல்படுத்தப்படவில்லை என்றும் திரு கான் சொன்னார்.
“அமெரிக்கா வேண்டுமானால் சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகளுக்கு வரி விதிப்பு விதிக்காமலும் போகலாம்,” என்றும் குறிப்பிட்டார் திரு கான்.
வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், வெள்ளிக்கிழமை (மே 16) சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழு, அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எடுத்துள்ள முயற்சிகளைப் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு துணைப் பிரதமர் கான் முதல் முறையாக பணிக்குழு தொடர்பான தகவல்களைச் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் தலைவருமான அவர், அமெரிக்கா சிங்கப்பூருக்கு விதித்துள்ள அடிப்படை 10 விழுக்காடு வரியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதில் பேச்சுவார்த்தை நடத்த ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஏற்றுமதிகளில் மருந்து ஏற்றுமதி மிக முக்கியம் என்றும் சொன்ன திரு கான், இரு நாடுகளும் நடத்தும் பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க ஒன்றும் என்று தெரிவித்தார்.
“இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நாள்களுக்கு நீடிக்கும். இதில் பல முக்கிய கூறுகள் அடங்கியுள்ளன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
மருந்துகளுக்கு அப்பாற்பட்டு பகுதி மின்கடத்தி பற்றியும் விளக்கிய திரு கான், சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பகுதி மின்கடத்தி குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் அதன் முழு தகவல் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் சொன்னார்.
“அமெரிக்கா சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது. இது ஒரு நற்செய்தி. பகுதி மின் கடத்தி ஏற்றுமதி சிங்கப்பூரின் மின்னிலக்க பொருளியலுக்கு மிக முக்கியமான ஒன்று. இப்போதைக்குப் பேச்சுவார்த்தையில் மருந்துகள் மீது கவனம் செலுத்தப்படும். இது தொடர்பான முன்னேற்றத்தை தற்போது வெளியிட முடியாது,” என்று குறிப்பிட்டார் திரு கான்.
பணிக்குழுவில் தற்போது தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சர் டான் சீ லெங், போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் உட்பட இன்னும் சிலர் உள்ளனர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய அமைச்சரவையை அமைக்கும் போது பணிக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார் திரு கான்.
ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (அடிகா) குறித்து பேசிய துணை பிரதமர் கான், ஆசியானுக்குள் உள்ள பெரும்பாலான பொருள்களுக்கு வரி விதிப்பு இல்லை என்றார்.
“அடிகா ஒப்பந்தத்தின்கீழ் 90 விழுக்காடு பொருள்களுக்கு வரி விதிப்பு கிடையாது. ஆனால் மீதமுள்ள பொருள்களுக்கு உண்டான வரி விதிப்பைக் குறைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும்,” என்று சொன்னார் திரு கான்.
அடிகாவை மேம்படுத்துவது பற்றி பகிர்ந்துகொண்ட திரு கான், ஆசியான் நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை இடர்பாடுகளின்றி வழிநடத்த தேவையான முயற்சிகள், எடுத்துக்காட்டுக்கு மின்னிலக்க அணுகுமுறை கையாளப்படும் என்றார்.