பொங்கோல் நார்த் வட்டாரத்தில் புதிய உணவு விநியோக இயந்திரத்தை துணைப் பிரதமர் கான் கிம் யோங் அறிமுகம் செய்துள்ளார்.
உணவுக்கான கட்டணம் மூன்று வெள்ளி.
புளோக் 326பி சுமாங் வாக்கில் உள்ள இந்த இயந்திரம், 30 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிவரும் செலக்ட் குழும உணவு விநியோக நிறுவனத்திற்குச் சொந்தமானது.
இந்நிறுவனத்துடன் இணைந்து தென்மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம் மார்ச் மாதத்தின்போது உணவு விநியோக இயந்திரங்களை அறிமுகம் செய்ததாக சாவ்பாவ் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.
சத்துள்ள உணவைக் கட்டுப்படியான விலையில் சிங்கப்பூரர்களுக்கு வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
உணவு விநியோக இயந்திரத்தைத் திரு கான் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
குழம்புச்சோற்றை வாங்கிய திரு கான், வட்டாரவாசி ஒருவருக்கு தந்ததையும் உணவைச் சுவைத்த அந்த வட்டாரவாசி தமது மனநிறைவை வெளிப்படுத்தும் சைகையைக் காட்டியதையும் காணொளி காண்பிக்கிறது.
இத்தகைய இயந்திரங்களைக் கூடுதல் எண்ணிக்கையில் பொங்கோல் முழுவதும் அறிமுகம் செய்ய விரும்புவதாகவும் திரு கான் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த இரு மாதங்களுக்குள் புதிதாக 80 இயந்திரங்கள் நிறுவப்படும் என்று சாவ்பாவ் ஊடகச் செய்தி தெரிவித்தது.


