ஹனோய்: வியட்னாமின் தாய் பின் (Thai Binh) மாநிலத்தில் வியட்னாம்-சிங்கப்பூர் தொழிலியல் பூங்காவை (VSIP) அமைக்க இணையம் வாயிலாக நிலம் திருத்தும் பணி நடைபெறும் என்று இரு நாடுகளும் அறிவித்து உள்ளன.
ஏறத்தாழ 333 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாக இருக்கும் அந்தத் தொழிலியல் பூங்கா, சிங்கப்பூர்-வியட்னாம் உறவின் முக்கிய அம்சமாகத் திகழும் 20 VSIP தொழிலியல் பூங்காக்களில் ஒன்று.
தாய் பின் தொழிலியல் பூங்கா வடக்கு வியட்னாமில் வளர்ந்து வரும் தொழிற்கூட சுற்றுச்சூழல்களைக் கொண்டது. மிகவும் முக்கியமானதொரு தொழிலியல் பூங்காவாக அதனை உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மின்னணு உற்பத்தி பாகங்கள், துல்லிய பொருளியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உயர் மதிப்புள்ள துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களையும் விநியோகிப்பாளர்களையும் உள்ளடக்கிய விரிவான கட்டமைப்புக்கு அந்தத் தொழிலியல் பூங்கா ஆதரவு வழங்கும்.
அந்தத் தொழிலியல் நிலப்பகுதி 2026ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கத் தயாராகிவிடும்.
இணையம் வாயிலாக நடைபெற்ற நிலம் திருத்தும் சடங்கில் பங்கேற்றுப் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், வியட்னாம்-சிங்கப்பூர் தொழிலியல் பூங்காக்கங்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாக ஏறத்தாழ முப்பதாண்டுகளாக திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
வியட்னாமிய பிரதமர் பாம் மின் சின்னும் அந்நிகழ்வில் பங்கேற்றார்.
தொடக்கம் முதலே தொழிலியல் பூங்கா மேம்பாட்டுக்கான அளவுகோலை ஏற்படுத்தி வந்துள்ள வியட்னாம் முதலீட்டாளர்களுக்கு அனைத்துலகத் தரத்திலான உட்கட்டமைப்புகளை வழங்கியதாக திரு வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிலம் திருத்தும் சடங்கிற்கு முன்னதாக, இரு நாட்டின் பிரதமர்களும் சந்தித்துப் பேசினர்.
சிங்கப்பூர்-வியட்னாம் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
“விரிவான உத்திபூர்வ பங்காளித்துவத்தை ஏற்படுத்த நாங்கள் இருவரும் விரும்புகிறோம். இரு நாட்டின் மக்களுக்கும் உறுதிமிக்க முடிவுகளை அந்தப் பங்காளித்துவம் வழங்கும்,” என்ற திரு வோங் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
சிங்கப்பூர்-வியட்னாம் இடையே ஐந்து உடன்பாடுகள் கையெழுத்தாகின. அந்நிகழ்வை இரு நாட்டின் பிரதமர்களும் பார்வையிட்டனர்.
விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை அமல்படுத்தும் நோக்கம் கொண்ட கடிதம் ஒன்றும் அந்த உடன்பாடுகளில் இடம்பெற்று இருந்தது.
ஆசியான் மின்சார உற்பத்திக்கான எல்லைதாண்டிய மின்சார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஓர் அம்சமும் உடன்பாடுகளில் அடங்கி உள்ளது.