பயணக் கட்டுப்பாட்டு தளர்வுகள் பற்றி சிங்கப்பூர், வியட்னாம் பரிசீலனை

பயணக் கட்டுப்பாட்டு தளர்வுகள் பற்றி சிங்கப்பூர், வியட்னாம் பரிசீலனை

2 mins read
910f7e38-d05c-4183-8595-67cc12894fc0
வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வியட்னாமிய துணைப் பிரதமர் பாம் பின் மின்னுடன் உரையாடுகிறார். படம்: வெளியுறவு அமைச்சு -

சிங்கப்பூரும் வியட்னாமும், வர்த்தகப் பயணங்களுக்கும் சில குறிப்பிட்ட சுற்றுப்பயணத் தளங்களுக்குமான பயணக் கட்டுப்பாடுகளை மெதுவாகத் தளர்த்துவது பற்றி பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எனினும் வியட்னாம் அதன் மக்களுக்கு எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி போடுகிறது என்பதைப் பொருத்தே தளர்வுகள் சாத்தியப் படும் என்றார் அவர்.

வியட்னாம் தலைநகர் ஹனோய்க்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்துக்குப் பின்னர் டாக்டர் விவியன் செய்தியாளர்களிடம் ஸூம் வழியாகப் பேசினார்.

ஹனோயில் வியட்னாமில் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் இங்யுவேன் சுவான் புக், பிரதமர் பாம் மின் சின், துணைப் பிரதமர் பாம் பின் மின் ஆகியோரை அவர் சந்தித்தார்.

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளும் ஒரே விதமான உத்தியைப் பயன்படுத்தியுள்ளன. தீவிரப் பரிசோதனைகள், தனிமையில் வைத்திருப்பது, பரவலாகத் தடுப்பூசியைப் போடுவது ஆகியவை அதில் அடங்கும்.

வியட்னாமில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மோசமான கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்பட்டதுடன், ஒன்றுகூடுதல்களும் குறைக்கப்பட்டன.

ஏறத்தாழ 98 மில்லியன் பேர் கொண்ட அதன் மக்கள்தொகையில் 2 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தளர்வுகளை அடுத்த சில மாதங்களில் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டு வருவது பற்றி இரு நாடுகளும் பரிசீலித்து வருவதாகவும், அதற்கு வியட்னாம் அதன் தடுப்பூசி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.