சிங்கப்பூர், வியட்னாம் இருநாடுகளின் அரசியல் தலைவர்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) அரசமைப்பு, தலைமைத்துவ மேம்பாடு, பொதுச்சேவை உருமாற்றம் போன்ற அம்சங்கள் குறித்து நேரடியாக சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
முதன்முறையாக நடக்கவிருக்கும் இவ்விதமான கருத்துப்பரிமாற்றத்துக்குத் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங்கும் வியட்னாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலவையின் நிரந்தர உறுப்பினர் டிரன் கம் துவும் இணைத் தலைமை ஏற்பர்.
இதன் விவரங்களை சிங்கப்பூர் பொதுச் சேவைப் பிரிவு (பிஎஸ்டி) அதன் செய்தி அறிக்கையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிட்டது.
இந்த பேச்சுவார்த்தைகளை பிஎஸ்டியும் வியட்னாமின் வெளியுறவு அமைச்சும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன. இருநாடுகளின் முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவ ஒப்பந்தத்தின் அங்கமாக இது இடம்பெறுகிறது.
“மீள்திறன் மிக்க எதிர்காலம்: தொழில்நுட்ப வளர்ச்சியும் திறன் கட்டமைப்பும் புதிய உச்சத்தை எட்டும் வகையில் சிங்கப்பூர், வியட்னாம் பங்காளித்துவத்தை உயர்த்துதல்” என்ற தலைப்பில் இரு தலைவர்களும் அவர்களது வரவேற்புரையை வழங்குவர்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு, எதிர்காலத்துக்கு தயார் நிலையில் உள்ள திறனாளர்களின் மேம்பாடு ஆகிய இரு அம்சங்களும் பேச்சுவார்த்தையில் உள்ளடங்கும்.
மேலும் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சுகளும் அவைகளுக்கு இடையில் நடப்பில் உள்ள ஒப்பந்தங்களை புதுப்பித்துக்கொள்ளும் நிகழ்வும் தொழில்நுட்ப இணைப்புக்கான கூட்டறிக்கை வெளியீடும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


