புதிய தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிப்பதில் உதவ விரும்பும் சிங்கப்பூர்: ஓங் யி காங்

புதிய தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிப்பதில் உதவ விரும்பும் சிங்கப்பூர்: ஓங் யி காங்

படம்: சாவ்பாவ்

24 Sep 2026 - 7:23 pm

2 mins read

அனைத்துலக நாடுகளை எதிர்காலத்தில் பாதிக்கக்கூடிய ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற கடுமையான பெருந்தொற்றை எதிர்கொள்ள முயன்றுவரும் உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளில் சிங்கப்பூரும் தோள்கொடுக்க முற்படுகிறது.

எதிர்காலப் பெருந்தொற்றுக்குக் காரணமாக இருக்கக்கூடிய கிருமிக்கு ‘டிசீஸ் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை விரைவுபடுத்துவதில் உதவக்கூடிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இணையவிருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று ஏற்படும்போது புதிய தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கும் கட்டுப்பாட்டாளராகச் சுகாதார அறிவியல் ஆணையம் செயல்படும்.

கொவிட்-19 காலகட்டத்தைச் சுட்டிக்காட்டிய திரு ஓங், அனைத்துவித புதிய தடுப்பு மருந்துகளுக்கான அங்கீகாரத்தை உலகச் சுகாதார நிறுவனம் வழங்கவேண்டிய நிலை இருந்ததால் அவற்றுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கான நடைமுறை தாமதமானதாகக் குறிப்பிட்டார்.

“எனவே, உலகச் சுகாதார நிறுவனமே அனைத்துப் பணிகளையும் தனியாகச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரைக்கிறோம்,” என்று திரு ஓங் விளக்கம் அளித்தார்.

மாறாக, அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் அமைப்பு போன்ற அனைத்துலக அளவில் நற்பெயர் பெற்ற கட்டுப்பாட்டு ஆணையங்களின் கட்டமைப்புகளின் உதவியை உலகச் சுகாதார நிறுவனம் நாடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அத்தகைய கட்டமைப்பில் பங்கு வகிக்க விரும்புவதையும் திரு ஓங் முன்வைத்தார்.

நோய்த் தடுப்பு, தயார்நிலை, நோயை எதிர்கொள்வது போன்றவை குறித்து நியூயார்க்கில் இம்மாதம் 25ஆம் தேதி ஐக்கிய நாட்டு நிறுவன பொதுக் கூட்டத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெறவிருக்கிறது.

அந்தக் கலந்துரையாடலை முன்னிட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் ஆகிய நாளேடுகளுக்கு அமைச்சர் ஓங் பேட்டியளித்தார்.

சுகாதார அமைச்சும் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட ஹிலமன் லேபரட்டோரிஸ் என்ற ஆராய்ச்சி, தயாரிப்பு அமைப்பும் இணைந்து நியூயார்க்கில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் ஓங் பேசினார்.

“தடுப்பு மருந்துகளைத் தவிர மருத்துவக் கருவிகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு ஆக முதிர்ச்சியடைந்த நிலையில் சிங்கப்பூர் அங்கீகாரம் பெற்றுள்ளது,” என்ற திரு ஓங், சுகாதார அறிவியல் ஆணையம் முதிர்ச்சி நிலை நான்கில் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதை மேற்கோள் காட்டினார்.

குறிப்புச் சொற்கள்
உலக சுகாதார நிறுவனம்ஓங் யீ காங்தடுப்பு மருந்துஅங்கீகாரம்