புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சிங்கப்பூரர்கள்

2 mins read
d222cf5f-bdec-43df-bf04-8c913a24553f
மரினே பேயில் பத்து நிமிடங்களுக்கு நீடித்த புத்தாண்டு வாணவேடிக்கையை ஏராளமானோர் கண்டுகளித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

சிங்கப்பூரில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் 2025ஆம் ஆண்டு மிகக் கோலாகலமாக வரவேற்கப்பட்டது.

கண்கவர் வாணவேடிக்கை, ஆளில்லா வானூர்திகள் காட்சி, பலர் ஒன்று கூடி கே-பாப் நடனம் ஆடியது போன்றவற்றுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது.

வாணவேடிக்கையைப் பார்த்து ரசிக்க டிசம்பர் 31ஆம் தேதி இரவு, ஆயிரக்கணக்கானோர் மரினா பே, காலாங் பேசின் முதலிய இடங்களில் திரண்டனர்.

பலர் தங்கள் வீடுகளுக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

குடியிருப்புப் பகுதிகளில் 17 இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்வாண்டு சிங்கப்பூர் அதன் 60வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.

இதற்கு எஸ்ஜி 60 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதைக் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடக்கி வைத்தன.

ஈசூனில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்துகொண்டார்.

புதிய ஆண்டில் தமது நீ சூன் வட்டாரக் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து பரிவுமிக்க, ஒற்றுமையான, முன்னோக்குச் சிந்தனை கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் சண்முகம் விருப்பம் தெரிவித்தார்,

தெம்பனிஸ் ஹப்பில் ஏறத்தாழ 3,000 பேர் ஒன்றிணைந்து கே-பாப் நடனம் ஆடினர்.

அதனைத் தொடர்ந்து, இரவு நேரத்தையும் வெளிச்சத்தில் மூழ்கடித்த வாணவேடிக்கையை மக்கள் கண்டு களித்தனர்.

இந்நிலையில், தெம்பனிஸ் வட்டாரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட குடியிருப்பாளர்கள் சிங்கப்பூருக்காக தாங்கள் செய்யவிருப்பவற்றை தெம்பனிஸ் ஹப்பில் உள்ள நான்கு மீட்டர் உயர சுவரில் எழுதினர்.

பரிவுமிக்க மாணவியாகவும் நல்ல மகளாகவும் பாசமிகு சகோதரியாகவும் இருக்கப்போவதாக ரெனீ என்ற சிறுமி பற்றுறுதி எடுத்துக்கொண்டார்.

வசிக்க சிறந்த நாடாக அடுத்து வரும் ஆண்டுகளிலும் சிங்கப்பூர் திகழ சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மென்பொருள் பொறியாளரான 38 வயது மனோஜ் பொனாலாவும் அவரது மனைவியான 33 வயது பிரியங்கா பொனாலாவும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டனர்.

அவர்கள் இருவரும் தெம்பனிஸ் ஹப்பில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தங்கள் எட்டு வயது மகனுடன் கலந்துகொண்டனர்.

மாலை நேர மழைத் தூறலையும் பொருட்படுத்தாது மரினா பேயில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்புச் சொற்கள்