மிச்சிகனில் இருந்த சிங்கப்பூர்: ஆராயும் மேடை நாடகம்

2 mins read
b6fa01d3-3fbf-4c76-ad01-ea533071ac1a
சிங்கப்பூர், மிச்சிகன் நாடகத்தின் நடிகர்கள் - படம்: பெங்டமோனியம்

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் மரம் வெட்டும் தொழிலுக்குப் பிரபலமாக இருந்த சிங்கப்பூர் என்ற நகரைக் களமாகக் கொண்ட நாடகம் இம்மாதம் 26ஆம் தேதி அரங்கேறவிருக்கிறது.

லாசெல் கலைக் கல்லூரியில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அரங்கத்தில் ஜூலை 11ஆம் தேதி வரை அந்த நாடகம் இடம்பெறும்.

1800களில் மிச்சிகன் மாநிலத்தில் கொடிக்கட்டி பறந்த மரம் வெட்டும் தொழில் 1870களில் மண்மேடாக மாறிப்போனது.

அதை அடிப்படையாகக் கொண்டு பெங்டமோனியம் - சிங்கப்பூர், மிச்சிகன் (Pangdemonium - Singapore, Michigan) என்ற நாடகத்தை எழுதியுள்ளார் அறிமுக எழுத்தாளர் ஓங் சொங் அன்.

இரண்டு சிங்கப்பூரர்கள் அமெரிக்க நண்பருடன் சிங்கப்பூர் நகரைத் தேடிச் சென்றபோது பலவற்றை கண்டறிகிறார்கள்.

நாடகம் முழுவதும் சிங்கப்பூர் என்ற பெயர் எதிரொலிக்கும் என்றார் 29 வயது திரு ஓங். நாடகத்தின் வெவ்வேறு கட்டங்களில் மிச்சிகனில் அழிந்துபோன சிங்கப்பூரை நாடகம் முன்வைக்கிறதா அல்லது சிங்கப்பூர் நாட்டைக் குறிப்பிடுகிறதா என்ற குழுப்பம் பார்வையாளர்களுக்குத் தோன்றலாம் என்றார் திரு ஓங்.

பெங்டமோனியம் நாடகத்தின் இணை இயக்குநர் திமத்தி கோ, 2023ஆம் ஆண்டில் கதையைப் பெற்றார். அதையடுத்து ஓங்கும் கோவும் ‌ஷ்ரேய் பார்கவா, சிங் ‌ஷூ யி, ஸேன் ஹனெய் ஆகிய நடிகர்களுடன் இணைந்து கதாபாத்திரங்களை உருவாக்கினர்.

சிங்கப்பூர், மிச்சிகன் நாடகம், ஆறு ஆண்டுகளுக்குப் பின் பெங்டமோனியம் உள்ளூரில் உருவாக்கியுள்ள முதல் மேடை நாடகம்.

பிறந்த நாட்டைவிட்டு தூரத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு இல்லம் என்றால் என்ன என்பதை மேடை நாடகம் ஆராய்கிறது என்றார் கோ.

“‌‌ஷ்ரேய்யின் கதாபாத்திரம் அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்ற ஒரு நபர். உபகாரச் சம்பளம் இன்றி அவரால் வெளிநாட்டில் பயில முடியாது. மற்றொரு சிங்கப்பூரர் உயர்ந்த சமூக-பொருளியல் தகுதிகொண்டவர். இதுவே சிங்கப்பூரர்களின் இருவேறு அனுபவங்களைப் பிரதிபலிக்கிறது,” என்றார் கோ.

நாடகத்தைக் காண பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நேரில் வருவார் என்று நாடகத்தின் இளம் இயக்குநர் எதிர்பார்க்கிறார்.

மிச்சிகனில் உள்ள சிங்கப்பூர் பற்றி பிரதமர் வோங் தேசியத் தின உரையில் குறிப்பிடுவதற்கு முன்னரே அதுபற்றிய நாடகத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக ஓங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்