அதிக மூப்படைந்த சமூகமாக மாறியுள்ள சிங்கப்பூர்

அதிக மூப்படைந்த சமூகமாக மாறியுள்ள சிங்கப்பூர்

சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 21.4 விழுக்காட்டினரின் வயது 65க்கும் அதிகம்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Sep 2026 - 6:03 pm

1 mins read

சிங்கப்பூர் அதிகாரபூர்வமாக அதிகம் மூப்படைந்த சமூகமாகியுள்ளது. 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை தற்போது 21 விழுக்காட்டுக்கும் அதிகம்.

இவ்வாண்டு, 21.4 விழுக்காட்டுச் சிங்கப்பூரர்கள் அந்த வயதில் உள்ளனர். கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 20.7 விழுக்காடாக இருந்தது. பத்தாண்டுகளுக்குமுன் இருந்த எண்ணிக்கை 13.7 விழுக்காடு.

அதிகமாக மூப்படைந்த சமூகத்துக்கு ஐக்கிய நாட்டு நிறுவனம் நிர்ணயித்த வரையறையை சிங்கப்பூர் தாண்டிவிட்டது.

80 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 152,000க்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 145,000ஆக இருந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்புநோக்க அது 60 விழுக்காட்டு அதிகம். அப்போது 95,000 குடிமக்களே 80 வயதுக்கும் மேற்பட்டோராக இருந்தனர்.

கடந்த ஆண்டில் சிங்கப்பூர் மக்கள்தொகையின் போக்கை விவரிக்கும் வருடாந்தர அறிக்கையை சிங்கப்பூர் மக்கள்தொகை, திறன் பிரிவு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்டது.

2035ஆம் ஆண்டுக்குள் நான்கு குடிமக்களில் ஒருவரின் வயது 65க்கு மேல் இருக்கும் என்று அறிக்கை மதிப்பிட்டது.

அதேவேளை, மூத்தோருக்குப் பொருளியல் ரீதியான ஆதரவை வழங்கக்கூடிய வேலை செய்யும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்கும் 2035ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகையோர் வழக்கமாக 20 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்