நம்பகமான உலகளாவிய விநியோகத் தொடர் நடுவமாகச் சிங்கப்பூர் தொடரும்: விவியன்

நம்பகமான உலகளாவிய விநியோகத் தொடர் நடுவமாகச் சிங்கப்பூர் தொடரும்: விவியன்

2 mins read
711ecbc3-12a5-4ac3-909e-ce09da613402
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தலைமையில் நடைபெற்ற முக்கியக் கனிமங்கள் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் பல நாட்டு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் (முன்வரிசை இடமிருந்து 3வது) கூட்டத்தில் கலந்துகொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹியூஸ்டன்: அமெரிக்காவில் நடைபெறும் முக்கியக் கனிமங்கள் அமைச்சர்நிலைக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் புதன்கிழமை (பிப்ரவரி 4) ஏற்று நடத்தினார்.

முக்கியக் கனிமங்கள் விநியோகத் தொடரை வலுப்படுத்தும் வழிவகைகளை ஆராய, இக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக டாக்டர் விவியன் தெரிவித்தார்.

“நம்பகமான உலகளாவிய விநியோகத் தொடர் நடுவமாகச் சிங்கப்பூர் திகழ்கிறது. வெளிப்படையான, விதிமுறைகள் அடிப்படையிலான வர்த்தகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த விநியோகத் தொடர் மீள்திறன்மிக்கதாகத் தொடர தொடர்ந்து பங்களிப்போம்,” என்றார் அமைச்சர் விவியன்.

நிக்கல், லித்தியம், கோபால்ட் போன்ற கனிமங்களின் முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.

“பகுதிமின்கடத்தி, மின்சார வாகனங்கள், புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்திக் கட்டமைப்புகள், தற்காப்புத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கு முக்கியக் கனிமங்கள் மிகவும் அவசியமானவை.

“மின்னிலக்க, பசுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த உலக நாடுகள் விரையும்போது முக்கியக் கனிமங்கள் அவற்றைச் சென்றடைய வேண்டும். இது பொருளியல் போட்டித்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடையது,” என்று டாக்டர் விவியன் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவையும் மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமை தாங்கும் பாக்ஸ் சிலிக்கா திட்டத்தில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு விநியோகத் தொடர்களைப் பெற இத்திட்டம் 2025ஆம் ஆண்டில் தொடங்கிவைக்கப்பட்டது.

திட்டத்தில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இஸ்‌ரேல், கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.

இம்மாதம் இத்திட்டத்தில் இந்தியா இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்