செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடு குறித்து நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர் ஏஐ தொடர்பான கலந்துரையாடலில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பிரச்சினைகளை ஆழமாகப் பார்க்கின்றன. அதற்காகச் சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலிலிருந்து முற்றிலுமாக விலகாது என்று திருவாட்டி டியோ கூறினார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் செய்தியாளர் சந்திப்பில் இதை அமைச்சர் டியோ கூறினார்.
அமைச்சர் டியோ செப்டம்பர் 24ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஐக்கிய நாட்டின் ஏற்பாட்டில் நடக்கும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
இக்கூட்டம் நியூயார்க் நகரில் நடக்கிறது. அதில் 190க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பாகப் பேசி வருகின்றனர்.
“மின்னிலக்கப் பிரிவில் சிங்கப்பூரின் வளர்ச்சி நன்றாக உள்ளது. மற்ற நாடுகள் சிங்கப்பூர் எவ்வாறு மின்னிலக்கப் பிரிவில் செயல்படுகிறது என்று கேட்டு வருகின்றன. மேலும் அந்த நாடுகளுக்கான மின்னிலக்கக் கட்டமைப்புகள், திறன் வளர்ச்சி உள்ளிட்டவற்றை அமைப்பது குறித்தும் பேசினர்,” என்று அமைச்சர் டியோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் டிஜிட்டல் கேட்வே (The Singapore Digital Gateway) தளம் மற்ற நாடுகள் பயன் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை நாடுகள் பயன்படுத்தி அவர்களுக்கு ஏற்றவிதத்தில் மின்னிலக்க வளர்ச்சியைப் பெருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் டிஜிட்டல் கேட்வே கட்டமைப்பு தொடர்ந்து விரிவடையும் என்றும் அதில் செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு, அறிவார்ந்த நகரங்கள், மின்னிலக்கப் பொருளியல் உள்ளிட்ட பல பிரிவுகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.