ஆசியான் வட்டாரத்தில் அமைதியும் வளர்ச்சியும் நிலைக்க சிங்கப்பூர் ஜப்பானுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் ஜப்பானியப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சானே தகாய்ச்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருவாட்டி தகாய்ச்சி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) ஜப்பானிய நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அதைத்தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமரானார் தகாய்ச்சி.
அதையடுத்து திருவாட்டி தாய்ச்சிக்குப் பிரதமர் வோங் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அரசியல், பொருளியல் எனப் பல பிரிவுகளில் வலுவடைந்து வருவதாகத் திரு வோங் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் முதல் தற்காப்பு, பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மையெனப் பல தரப்பில் இரு நாடுகளும் உறுதுணையாக இருப்பதைப் பிரதமர் சுட்டினார்.
“சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரே மாதிரியான உத்திபூர்வ கொள்கைகள் உள்ளன. இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையான உறவு உள்ளது. அனைத்துலக சட்டங்களை மதித்து இருதரப்பு உறவில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவோம்,” என்றார் திரு வோங்.
அதேபோல் ஆசியான் அமைப்பின் முக்கியப் பங்காளிகளில் ஒன்றாக ஜப்பான் இருப்பதையும் குறிப்பிட்டார் பிரதமர் வோங்.
ஆசியானுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவை வழிநடத்தும் பொறுப்பு சிங்கப்பூருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் அந்தப் பொறுப்பில் இருக்கும் என்பதையும் பிரதமர் வோங் கடிதத்தில் நினைவூட்டினார்.
2026ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60 ஆண்டுக்காலப் பயணத்தை எட்டவுள்ளது
தொடர்புடைய செய்திகள்
“இரு நாட்டு மக்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு திருவாட்டி தகாய்ச்சியுடன் அணுக்கமாகச் செயல்பட ஆவலுடன் காத்திருக்கின்றேன். பிரதமர் பதவியில் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள், விரைவில் சந்திப்போம்,” என்று வாழ்த்து கடிதத்தில் திரு வோங் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஜப்பானியப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய இஷிபாவுக்கும் பிரதமர் வோங் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

