தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிச்சயமற்ற உலகிலும் செழிப்புற சிங்கப்பூர் தொடர்ந்து முயலும்: வோங்

2 mins read
8da06d9b-b0b0-461f-93f9-7b2b561e03bc
‘த வால் ஸ்திரீட் ஜர்னல்’ சஞ்சிகை நேர்காணலில் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

நிச்சமயற்ற உலகில் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகளுடனான வர்த்தக உறவைச் சிங்கப்பூர் வலுப்படுத்தி வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

“கணிக்க முடியாத பல்வேறு அம்சங்கள் நிறைந்த காலத்தில் நாம் இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் போட்டிகள் மிகுந்த, ஒத்துழைப்பு குறைவானதாக உலகம் மாறக்கூடும்,” என்று ‘த வால் ஸ்திரீட் ஜர்னல்’ சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தப் புதிய உலகில் தனது வருங்காலத்தை வடிவமைக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் சிங்கப்பூர் செய்துகொள்ளும். அந்த நோக்கில் தற்போதைய தென்கிழக்காசியக் கூட்டாளிகளையும் கடந்து, ஒத்த கருத்துள்ள நாடுகளின் ஒத்துழைப்பை நாடி வருகிறோம். அதற்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம்.

“அண்மையில் அறிவிக்கப்பட்ட முதலீடு மற்றும் வர்த்தகப் பங்காளித்துவத்துக்கான புதிய கட்டமைப்பும் அதன் ஒரு பகுதி. சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் இணைந்த கட்டமைப்பு அது.

“இவை தவிர, சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் சார்ந்த நாடுகளுடனும் ஒன்றிணைந்து வருகிறது சிங்கப்பூர். 14 நாடுகளுடனான இணைப்பு அது. எங்களுக்குள் இருக்கும் அக்கறைகளை நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.

“விநியோகத் தொடர்புகளைச் சுற்றிலும் வர்த்தகம் தொடர்பான முன்னெடுப்புகளை எவ்வாறு முன்னேற்றிக் கொண்டுசெல்வது என்பதிலும் முனைப்புடன் உள்ளோம். இது ஒரு தொடக்கம்.

“உலக ஒழுங்கில் மாற்றம் நிகழும்போதெல்லாம் குழப்பமான, கணிக்க இயலாத, ஒழுங்கற்ற உருமாற்றங்கள் ஏற்படுவதை வரலாறு உணர்த்துகிறது.

“எல்லா நாடுகளையும் வரவேற்கும் திறந்த பொருளியலைக் கொண்ட சிறிய நாடு என்ற முறையில், அதன் தாக்கங்கள் கடினமானதாக இருப்பதை நிச்சயம் உணர்வோம்,” என்றார் பிரதமர்.

அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்துச் செய்தியாளர் வினவியபோது, “சிங்கப்பூர் 10 விழுக்காடு அடிப்படை வரி விதிப்புக்குள் உள்ளது. அது இனிவரும் காலங்களில் கூடுமா குறையுமா என்பதை யாரும் கூற இயலாது,” என்றார் திரு வோங்.

“இருப்பினும், மருந்தியல் துறை மீதும் பகுதி மின்கடத்தித் துறை மீதும் துறைசார் வரி விதிப்பது பற்றி அமெரிக்கா பரிசீலித்து வருவது குறித்தப் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். அதில் நல்ல முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம்,” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தென்கொரியப் பொறியாளர்களை அமெரிக்காவின் குடிநுழைவுத் துறை அண்மையில் கைது செய்த சம்பவத்தைச் சிங்கப்பூர் நிறுவனங்கள் எவ்வாறு பார்க்கின்றன என்று திரு வோங்கிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் சட்டவிரோத ஊழியர்களுக்கு எதிராகச் சிங்கப்பூரும் கடுமையாக நடந்துகொள்ளும். வெளிநாட்டு நிபுணர்களை, வெளிநாட்டு ஊழியர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆயினும், கடுமையான விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அவர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்