நாடுகளுடனான உறவை வலுப்படுத்த சிங்கப்பூர் தொடர்ந்து முயலும்: பிரதமர் வோங்

2 mins read
24347810-e1f0-4a14-8f4c-da0d2d3582cc
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்ட ஆறு நாள் அதிகாரத்துவப் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆக்லாந்து: சிங்கப்பூர் பிற நாடுகளுடனான நட்பை வலுப்படுத்திக்கொள்ளவும் அரசதந்திர உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் எப்போதும் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளுடனான பங்காளித்துவத்தைச் சிங்கப்பூர் எப்போதும் உன்னிப்பாகக் கவனிக்கிறது என்ற அவர், குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் சிங்கப்பூர் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டால் அந்த உறவில் பயன் இருப்பதை அது உறுதிசெய்யும் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் மேற்கொண்ட ஆறு நாள் அதிகாரத்துவ பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் திரு வோங் பேசினார்.

அக்டோபர் 11ஆம் தேதியுடன் முடிவடைந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவுடன் ஏற்கெனவே இருந்த விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டை சிங்கப்பூர் மேம்படுத்திக்கொண்டது. நியூசிலாந்துடன் மேம்பட்டிருந்த பங்காளித்துவத்தை சிங்கப்பூர் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டுக்குக் கொண்டுசென்றது.

விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு உயர்மட்ட விரிவான அரசதந்திர உறவுகளைக் குறிக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தைத் தவிர பிரான்ஸ், இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளுடனும் சிங்கப்பூர் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடனும் நியூசிலாந்துடனும் சிங்கப்பூர் அடுத்த பத்தாண்டுகளுக்கு ஆக்ககரமான திட்டங்களை வகுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் தற்காப்பு, பசுமை, மின்னிலக்கப் பொருளியல், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளுக்கான திட்டங்களை மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாடு மூலம் சிங்கப்பூர் செய்துகொண்டுள்ளது.

நியூசிலாந்துடன் வர்த்தகம், பாதுகாப்பு, புத்தாக்கம், விநியோகத் தொடர் ஆகியவற்றில் சிங்கப்பூர் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

ஒரே சிந்தனையுள்ள நாடுகளுடன் இணைந்து செயல்பட விழையும் சிங்கப்பூர், முதலில் சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா போன்ற ஆசிய அண்டை நாடுகளைத்தான் நாடும் என்றார் திரு வோங்.

ஆனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் தாராள, மேம்பட்ட பொருளியல்களைக் கொண்டிருக்கிறது என்றும் சிங்கப்பூருக்குப் பலவிதங்களில் உகந்ததாக இருக்கிறது என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

சாதாரண மக்களுக்கு அத்தகைய உயர்மட்ட பங்காளித்துவங்கள் எவ்வாறு உதவும் என்ற கேள்விக்கு, அரசாங்கம் அதிக அளவில் வர்த்தகங்களுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் சிங்கப்பூரர்களுக்கு அது பயனளிக்கும் என்றும் அவர் பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்