சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களுடன் அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்று துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதன் மூலம் இரண்டு நாட்டு மக்களும் பயனடைவார்கள் என்று திரு கான் வியாழக்கிழமை (மார்ச் 13) தெரிவித்தார்.
தற்போது உலக அளவில் பொருளியல் தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் அதிகரித்து வருகிறது, அதனால் இரண்டு நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இரு தரப்புக்கும் வெற்றி கிடைக்கும் என்று சிங்கப்பூர் அமெரிக்க வர்த்தக, தொழிற்சபையில் துணைப் பிரதமர் கான் பேசினார்.
“சிங்கப்பூர் எப்போதும் தன்னைப் போல் சிந்தனையுள்ள பங்காளிகளுடன் தொடர்ந்து வேலை செய்ய நினைக்கும். அனைத்துலக வர்த்தகச் சட்டங்களை மதித்து நடப்பது மூலம் வர்த்தகமும் முதலீடும் தொடர்ந்து வளர்ச்சி அடையும்,” என்றார் அவர்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பொருளியல் உறவு நீண்டகால மற்றும் ஆக்ககரமான ஒன்று என்று சிங்கப்பூருக்கான அமெரிக்கத் துணைத் தூதர் கேசி மேஸ் தெரிவித்தார்.
இந்த வட்டாரம் நன்றாக வளர்ச்சி கண்டுள்ளது, அதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் சிங்கப்பூரின் வளர்ச்சியை நன்கு கவனித்து வருகின்றன என்றார் திரு மேஸ்.
“கடந்த சில ஆண்டுகளாகச் சிங்கப்பூரைப் பார்த்து வருகிறேன். தென்கிழக்கு ஆசியாவில் வர்த்தகம் செய்ய அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும் நாடாகச் சிங்கப்பூர் உள்ளது,” என்றார் அவர்.
ஷா சென்டரில் சிங்கப்பூர் அமெரிக்க வர்த்தக, தொழிற்சபையின் இடம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவின் போது இந்தக் கருத்துகளைத் துணைப் பிரதமர் கானும் அமெரிக்கத் துணைத் தூதர் மேசும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 28 பில்லியன் வெள்ளிக்கு மேலான வரியை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஆணையம் புதன்கிழமை (மார்ச் 12) தெரிவித்தது.
அமெரிக்க வரி விதிப்புக்கு இணையாக ஐரோப்பிய ஆணையம் வரிவிதித்திருக்கும் நேரத்தில் அமெரிக்காவும் சிங்கப்பூரும் தங்களது வர்த்தக நட்பைப் பாராட்டியுள்ளன.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து உலக வர்த்தகம் ஆட்டங்கண்டு வருகிறது.
அவர் சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள்மீது வரி விதிப்பதாக அறிவித்தார். அவருக்குப் பதிலடி தரும் விதமாக அந்த நாடுகளும் அமெரிக்காமீது வரிவிதித்து வருகின்றன.

