சிங்கப்பூர் சிறிய, வெளிப்படையான நாடாக இருப்பதாலும், தனது போட்டித்தன்மைக்கு தொழில்நுட்பத்தைப் பெரிதும் சார்ந்திருப்பதாலும், செயற்கை நுண்ணறிவு சவாலை மற்ற நாடுகளைவிட அது விரைவில் எதிர்கொள்ளும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
அதே வேளையில், செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையான மின்னிலக்க உள்கட்டமைப்பு வசதிகள் சிங்கப்பூரிடம் உள்ளன. சவால்களை மற்ற நாடுகளைவிட வேகமாக எதிர்கொள்வது சிங்கப்பூருக்குப் பழகிப்போன ஒன்று என்றும் அதிபர் சொன்னார்.
சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளியல் மன்றத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் அவர் இதனைக் கூறினார்.
“மற்ற உற்பத்தித்திறன் மேம்பாடுகளைப் போலவே நாங்களும் செயற்கை நுண்ணறிவை ஒரு சாதகமான அம்சமாகப் பார்க்கிறோம். இந்த நன்மைகள் ஊழியரணியின் அனைத்து நிலைகளிலும் சென்றடைவதை உறுதிசெய்வதே எங்களின் உண்மையான சவால்,” என்றார் திரு தர்மன்.
ஜனவரி 20ஆம் தேதி அரசியல் வர்ணனையாளர் இயன் பிரெம்மருடன் உரையாடிய அதிபர், நாடுகள் செயற்கை நுண்ணறிவை ஒரு புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தலாக மட்டும் பார்க்காமல், ஒரு நேர்மறையான சவாலாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனித மூலதனத்தை அதிகப்படுத்துவது, மக்களின் திறன்களை வளர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பெரும் வளர்ச்சியை எட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறைக் கொள்கைகள் அல்லது எதிர்காலத்தைக் கணிக்க முற்படுவதைவிட மக்களின் திறன்களில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திரு தர்மன், “மக்களின் திறன்களை வளர்த்தால் அது அவர்களுக்கும் ஒட்டுமொத்த பொருளியலுக்கும் நன்மையாக அமையும்,” என்றார்.
இது உலகெங்கிலும் ஒரு சவாலாக இருக்கும் என்றும் இது எளிதான காரியமன்று என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழியரணியின் பெரும்பகுதியினரான அலுவலக ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அதற்குத் துணையாகச் செயல்படும் வேலைகளைக் கண்டறிவதற்கும் அல்லது சுகாதாரத்துறை போன்ற வளர்ந்துவரும் துறைகளில் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் முதலீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
தொடர் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்க சிங்கப்பூர், 10 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தைத் தொடங்கியதைச் சுட்டிய அதிபர், “சிங்கப்பூரில் எங்களால் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஏனெனில், இது எங்களது பொருளியல் சிந்தனையில் ஒரு பகுதியாக உள்ளது,” என்றார்.
உலகளவில் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை அதிகப்படுத்தி, அதன் மோசமான அபாயங்களைத் தடுப்பதற்கான உலகளாவிய நிர்வாகத்தில் உலகம் குறைந்த அளவே தயாராக உள்ளதாக திரு தர்மன் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் தொடுக்கப்படும் அணுவாயுதப் போர், கட்டுக்கடங்காத பொய்த் தகவல்கள், அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் இணையக் குற்றங்கள் உள்ளிட்டவை இத்தகைய அபாயங்களில் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவின் மிக மோசமான ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டுமானால், செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்கும் முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்களிடையே மனப்போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று திரு தர்மன் கூறினார்.
“ஒரேயொரு செயற்கை நுண்ணறிவுப் பந்தயம் அல்ல, பல செயற்கை நுண்ணறிவுப் பந்தயங்கள் உள்ளன,” என்று கூறிய அவர், அடிப்படை ஆய்வு, மருத்துவம் முதல் இயந்திரவியல் வரை பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டைச் சுட்டினார்.
எந்த நாட்டின் தொழில்நுட்பக் கட்டமைப்பை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன போன்ற உதாரணங்களையும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவோ, சீனாவோ முழுமையான செயற்கை நுண்ணறிவுப் பந்தயத்தில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.
எனவே, மருந்து கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் இருதரப்பிற்கும் லாபகரமான விளைவுகளைத் தேடும் அதே வேளையில், போட்டியிடுவதற்கான ஒரு கட்டமைப்பை அவை உருவாக்க வேண்டும் என்று திரு தர்மன் கூறினார்.
அணுவாயுதங்களை மனிதர்களே கட்டுப்படுத்த வேண்டும், செயற்கை நுண்ணறிவு அல்ல என்பதில் அமெரிக்க, சீனத் தலைவர்கள் ஏற்கெனவே உடன்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

