சிங்கப்பூர் ‘ஏஐ’யை அதிகம் கட்டுப்படுத்தவும் செய்யாது, கண்காணிக்காமலும் இருக்காது: கான்

சிங்கப்பூர் ‘ஏஐ’யை அதிகம் கட்டுப்படுத்தவும் செய்யாது, கண்காணிக்காமலும் இருக்காது: கான்

2 mins read
14ea0d34-185b-4514-a805-7bee8791fcac
வா‌ஷிடங்னில் துணைப் பிரதமர் கான் கிம் யோங் (இடது). - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிர்வகிப்பை பொறுத்தவரை நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவதே சிங்கப்பூரின் எண்ணம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

அந்த வகையில், இங்கு செயற்கை நுண்ணறிவுக்கு அளவுக்கதிகமான கட்டுப்பாடும் இல்லை. அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர் நினைத்தபடி செயல்படும் அளவிற்கு நீக்குப்போக்கும் இல்லை என்று திரு கான் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) சுட்டினார்.

அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிடங்னில் செமஃபோர் உலகப் பொருளியல் மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல் அங்கத்தில் திரு கான் பேசினார். அவர் அமெரிக்காவுக்கு ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கலந்துரையாடலில் செமஃபோர் செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் கிளே சேண்ட்லர், செயற்கை நுண்ணறிவு நிர்வகிப்பில் சிங்கப்பூரின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு அறவே கண்காணிக்கப்படக்கூடாது என்ற அணுகுமுறையே பரவலாக இருப்பதாக திரு சேண்ட்லர் தெரிவித்தார். அதேவேளை, ஐரோப்பா சற்று கவனமாகச் செயற்கை நுண்ணறிவை அணுகுவதாகவும் அவர் சொன்னார்.

அதேநேரம் சீனா, தொழில்துறைகளில் பின்பற்றப்படும் அணிகுமுறையை செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவகாரங்களிலும் பின்பற்றுவதாக திரு சேண்ட்லர் கூறினார்.

அமைச்சர் கானின் கருத்து

இதுகுறித்துப் பேசிய திரு கான், நம்பிக்கை மிகவும் முக்கியம் என்பதே கொவிட்-19 காலம், ர‌ஷ்யா-உக்ரேன் போர், தற்போது தொடரும் மத்திய கிழக்குப் பூசல் போன்ற நெருக்கடிகள் கற்றுத்தந்த முக்கியப் பாடம் என்று குறிப்பிட்டார். அந்த வகையில், தரவுகளும் நம்பிக்கை அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டினார்.

அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவைக் கண்காணிக்கும் அம்சங்களையும் ஏஐ வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று திரு கான் விளக்கமளித்தார். செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கான கட்டமைப்புகளும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

“நாம் பெரிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அதேநேரம், அவை (செயற்கை நுண்ணறிவுத் தளங்கள்) கட்டுப்பாடின்றி செயல்படுவதைத் தவிர்க்க கண்காணிப்புடன், கவனத்துடன் செயல்படுகிறோம்,” என்று திரு கான் குறிப்பிட்டார்.

“சம்பந்தப்பட்ட நடைமுறைகளில் சில நன்கு செயல்படுத்தப்பட்டவுடன் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கத் தொடங்குவோம். அப்போதுதான் வருங்காலத்தில் இடம்பெறும் மேம்பாடுகளை நம்மால் நிர்வகிக்க முடியும், செயற்கை நுண்ணறிவு முறைகளைச் செயல்படுத்த முடியும்,” என்றும் அவர் விவரித்தார்.

இந்தக் கவனமான அணுகுமுறையால் புத்தாக்கத்துக்கு வழிவிடும் அதேவேளையில் நம்பிக்கையைப் பாதுகாக்கப் போதுமான கண்காணிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகிறது என்று திரு கான் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்