தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிலைமை மோசமானால் நிலைப்பாடு மாறக்கூடும்

2 mins read
பாலஸ்தீன விவகாரம் குறித்து அமைச்சர் விவியன் நாடாளுமன்றத்தில் விளக்கம்
0e3f4ede-0fb3-4f66-b057-d8372150060a
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை ஒருதலைப்பட்சமாக இணைப்பதை சிங்கப்பூர் அங்கீகரிக்க முடியாது என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இஸ்ரேலின் வாழ்வதற்குரிய உரிமையை ஏற்றுக்கொண்டு பயங்கரவாதத்தைத் திட்டவட்டமாகக் கைவிடும் ஒரு பயனுள்ள அரசாங்கத்தைப் பாலஸ்தீனம் கொண்டிருந்தால் ​​சிங்கப்பூர், அதை ஒரு தனிநாடாக அங்கீகரிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் செப்டம்பர் 22ஆம் தேதி தெரிவித்தார்.

அதே நேரத்தில், இரு-நாட்டுத் தீர்வுக்கு சிங்கப்பூரின் ஆதரவு என்பது, அத்தகைய விளைவுக்கு எதிராக அல்லது குறைத்து மதிப்பிட முயலும் இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்க்கும் என்பதாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

“ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை ஒருதலைப்பட்சமாக இணைப்பதை சிங்கப்பூர் அங்கீகரிக்க முடியாது. ஏனெனில், இது அனைத்துலக சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“நிகழ்வுகள் வேகமாக வெளிப்படுவதால், சிங்கப்பூர் அங்கு நடக்கும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும். நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் அல்லது இஸ்ரேல் இரு நாடுகள் தீர்வைக் கீழறுக்க மேலும் நடவடிக்கைகளை எடுத்தால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்த எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம்,” என்றும் டாக்டர் விவியன் விவரித்தார்.

மேற்குக் கரையில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த இஸ்ரேல் முடிவெடுத்ததன் விளைவாக, சிங்கப்பூர் அங்கு பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்குப் பொறுப்பான தீவிர வலதுசாரி குடியேற்றக் குழுக்களின் தலைவர்கள் மீது இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை அமல்படுத்தும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து சிங்கப்பூர் இதுவரை தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்தி வருவதாகவும் பாலஸ்தீன ஆணையத்தின் ஆற்றல்களை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையில் தெரிவித்தார்.

காஸாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் சிங்கப்பூரின் அரசதந்திர முயற்சிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த 13 கேள்விகளுக்கு டாக்டர் விவியன் பதிலளித்தார்.

ஐக்கிய நாட்டுச் சபையின் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து, சிங்கப்பூர் அண்மையில் இரு-நாட்டுத் தீர்வை ஆதரிக்கும் நியூயார்க் பிரகடனத்துக்குத் தனது ஆதரவை தெரிவித்தது.

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகிய நான்கு நாடுகள் செப்டம்பர் 21ஆம் தேதி பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தன. இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக இது இடம்பெற்றது.

இந்த நான்கு நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்டவற்றுடன் இணைகின்றன.

அமெரிக்காவும், ஆசியாவில் ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியவை பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட ஒரு நாடாக முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்