செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் நடுநிலையான நம்பகமான இடமாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அக்டோபர் 7ஆம் தேதி தெரிவித்தார்.
இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது; கொள்கை மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஆனால், உலக நாடுகளுடனான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் சிங்கப்பூர் நடுநிலையை கடைப்பிடிக்கும் என்றார் அவர்.
“செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வடிவமைப்பதில் அத்தொழில்நுட்பத்தின் மேம்பாட்டாளர்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிளவுபட்ட உலகில் சிக்கிக்கொள்ளக்கூடாது,” என்று அவர் கூறினார்.
‘த பிஸ்னஸ் டைம்ஸ்’ ஆசிய எதிர்கால உச்ச மாநாடு தொடர்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று அமைச்சர் சான் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஹுவாவெய் நிறுவனத்துடன் சேர்ந்து ஓசிபிசி வங்கி ஏற்பாடு செய்திருந்தது.
செயற்கை நுண்ணறிவை இலக்காகக் கொண்ட ஒரு நாள் கருத்தரங்கு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவில் ஆற்றல் வாய்ந்த நாடாக திகழ்வதில் அரசாங்கத்திற்கு உள்ள திட்டங்களைப் பற்றி பேசிய திரு சான், சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக் கழகத்துடன் (எஸ்யுடிடி) நடைபெற்ற கலந்துரையாடலை, “நான் அவர்களுக்கு சவால் ஒன்றைக் கொடுத்தேன். ஒரே சமயத்தில் அமெரிக்க, சீன செயற்கை நுண்ணறிவு வடிவமைப்புகளை உருவாக்கும் உலகில் தனித்துவமான பல்கலைக் கழகமாக எஸ்யுடிடி செயல்பட முடியுமா,” என்று சுமார் 200 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நினைவுகூர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“நாம் ஒரு நம்பகமான மற்றும் நடுநிலையான இடமாக இருக்க விரும்புகிறோம். போட்டிக்காக மட்டுமல்லாமல் உலகின் சிறந்த தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து, ஒத்துழைக்கும் இடமாக சிங்கப்பூர் திகழ வேண்டும்,” என்று திரு சான் வலியுறுத்தினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முன்னேற்றங்கள் உலகளாவிய வர்த்தகம், புத்தாக்கம், இதர நன்மைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இரண்டு தொழில்நுட்ப சக்திகளையும் உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இந்த நிலையில் திரு சானின் கருத்து வெளியாகியிருக்கிறது.
“செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை வடிவமைப்பதில் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமன்று. தேர்ந்தெடுக்கப்படும் கருவிகள் நாட்டுக்குப் பலனளிக்க வேண்டும்.
“நாம் நடைமுறைக்கு என்ன தேவையோ அதை மட்டும் பார்க்கிறோம். இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா அல்லது வேறு எங்கிருந்து செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் வந்தாலும் நமக்கு பயனளிக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
“செயற்கை நுண்ணறிவு என்பதால் அதன் கருவிகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. அவை பயனுள்ளதாக இருப்பது உறுதிசெய்யப்படும்,” என்று கல்வி அமைச்சர் சான் விவரித்தார்.

