ஊட்டச்சத்துத் தர முத்திரை திட்டத்திற்காக சிங்கப்பூர், உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து ‘ஆரோக்கியமான நகரம்’ (Healthy cities award) எனும் விருதைப் பெற்றுள்ளது. பானங்களில் இருக்கும் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முத்திரை வழங்கப்படுகிறது.
உடல்நலத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதில் சிறந்துவிளங்கும் நகரங்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இவ்விருதைப் பெற்ற ஆசியாவைச் சேர்ந்த எட்டு நகரங்களில் சிங்கப்பூரும் ஒன்று.
ஆரோக்கியமான உணவு முறைகளுக்காகவும் உகந்த ஊட்டச்சத்துக்காகவும் உணவுச் சூழலை மாற்றியமைத்தல் என்ற பிரிவில், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் உணவுச் சூழலைச் சீரமைக்க நகரங்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உதவும் என்பதற்கான எடுத்துக்காட்டாகச் சிங்கப்பூரின் ஊட்டச்சத்துத் தர முத்திரைத் திட்டம் இருப்பதாகக் கூறப்பட்டது.
சீனா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவு நாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பகுதிக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார அலுவலகம், சிங்கப்பூரின் இந்த முயற்சியை விரிவான, முன்னோக்கிச் சிந்திக்கும் திட்டம் எனப் புகழாரம் சூட்டியது.
பயனீட்டாளர்களுக்கு நேரடியாக வெளிப்படையான தகவல்களை வழங்குவதன் மூலம், பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் குறைக்க தொழில்துறை சீர்திருத்தத்தை ஊக்குவிக்கும் சூழலைச் சிங்கப்பூரின் இந்த முயற்சி உருவாக்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் முன்னெடுத்த இந்த முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், தேர்வுக் குழு இந்த விருதை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துத் தர முத்திரை திட்டத்தில் சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை குறைவாக இருக்கும் பானங்கள் A மற்றும் B என தரம் பிரிக்கப்படுகின்றன. மேலும், இனிப்பு வரம்பை மீறும் பானங்கள் C மற்றும் D தரப்படுத்தப்படுகின்றன.
தயாரிப்பு இடத்தில் அல்லது விற்பனைக்குமுன் பொட்டலமிடப்பட்ட பானங்கள் மீதும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பானங்களின்மீதும் இந்த முத்திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.