குழந்தைகளுக்கு விளையாட்டை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் நோக்கில், சிங்கப்பூரில் உள்ள விளையாட்டு மைதானங்களின் வடிவமைப்பு மறுபரிசீலனை செய்யப்படுகிறது.
மவுண்ட் பிளசன்ட் கிரெஸ்ட், உட்லண்ட்ஸ், பீஷான் ஆகிய இடங்களில் வரவிருக்கும் பிடிஓ பேட்டைகளில், குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையானவிளையாட்டு அம்சங்களைக் கொண்ட தேசிய வழிகாட்டுதல்களின்படி புதிய விளையாட்டு மைதானங்கள் கட்டப்படும்.
சறுக்குதல், சமநிலைப்படுத்துதல், ஏறுதல் போன்ற கட்டாயக் கூறுகள் இதில் அடங்கும். மேலும், வெவ்வேறு வயதுக் குழுக்கள் மற்றும் இடத்தின் சூழல்களுக்கு ஏற்ப அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் (வீவக) உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், வீவக குடியிருப்புப் பகுதிகள், சுற்றுப்புறப் பூங்காக்களில் உள்ள புதிய விளையாட்டு மைதானங்களுக்கான முக்கியத் தேவைகளை வரையறுக்கின்றன. இவற்றில் உடல், சமூக, அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுகள் அடங்கும்.
2025, டிசம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள், பழைய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தற்போதைய விளையாட்டு மைதானங்களை நகர மன்றங்கள் புதுப்பிக்கும்போதும் பயன்படுத்தப்படும். இதன் மூலம், குழந்தைகளுக்கு மேலும் பலதரப்பட்ட மற்றும் ஈர்க்கக்கூடிய விளையாட்டுகளுக்கான அணுகல் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.
ஏப்ரல் மாதம் ‘இன்சைட்’ இதழுக்கு அளித்த பேட்டியில், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவேலிங், இங்குள்ள விளையாட்டு மைதானங்கள் மேலும் ஆக்கபூர்வமான வடிவமைப்புகளைப் பெறும் வகையில் பரிணமித்துள்ளன என்று கூறினார். ஆனால், பல மைதானங்கள் விளையாட்டின் மதிப்பைப் புறக்கணித்து, அழகியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன என்றார் அவர்.
“குழந்தைகள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும், விளையாட்டின் நன்மைகளையும் பற்றி நாம் மேலும் அறிந்துகொள்ளும்போது, அழகாகத் தோற்றமளிக்கும் விளையாட்டு மைதானங்களை வடிவமைப்பதிலிருந்து நாங்கள் விலகிச் செல்ல விரும்புகிறோம். பெற்றோர் பலர், தங்கள் பிள்ளைகள் மின்னிலக்கத் திரைகளில் நேரத்தைச் செலவிடுவதை விடுத்து, வெளியில் அதிக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விளையாட்டு மைதானங்கள் பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும், ஒரு நோக்கத்தைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்,” என்று திருவாட்டி சுன் விவரித்தார்.
“மணலைக் கொண்டு குழந்தைகள் பலவிதமான செயல்களைச் செய்யலாம். மணல் கோட்டைகளைக் கட்டுவது, குழி தோண்டுவது, பாவனை விளையாட்டுகளில் ஈடுபடுவது எனப் பலவற்றையும் செய்யலாம். மேலும், மணல் விளையாட்டின் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அது ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மட்டும் இருப்பதில்லை,” என்று அமைச்சர் கூறினார்.

