சன்னல் இல்லாத குளியலறையில் நான்கு நாள்களாக சிக்கிக் கொண்ட சிங்கப்பூர் பெண்

சன்னல் இல்லாத குளியலறையில் நான்கு நாள்களாக சிக்கிக் கொண்ட சிங்கப்பூர் பெண்

2 mins read
a37c76a4-6cd7-4add-a97b-bfe5478085f5
படம்: அன்ஸ்பிளேஷ் -

சன்னலே இல்லாத தமது குளியலறையில் நான்கு நாள்கள் சிக்கிக் கொண்டார் 31 வயது சிங்கப்பூர் பெண்.

கடைசியில் காவல்துறை அதிகாரிகள் இருவர் அவரைக் காப்பாற்றினர்.

குழாய் நீரைக் குடித்தும் முடிந்தபோதெல்லாம் கழிவறை இருக்கையில் தூக்கியும் நான்கு நாள்களை அவர் கழித்தார்.

திருவாட்டி யாங் என்று மட்டும் அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

குளியலறைக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்லாததால் அவரால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.

பசி வந்தபோதெல்லாம் அதை அடக்குவதற்கு தண்ணீரைக் குடித்துக்கொள்வேன் என்றார் திருவாட்டி யாங்.

புக்கிட் தீமாவில் உள்ள பியூட்டி வொர்ல்ட் கடைத்தொகுதி அருகே காண்டோமினிய கட்டடத்தின் மேல் தலத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டில் அவர் ஓராண்டாக தனியாக வசித்து வருகிறார்.

சம்பவம் நடப்பதற்கு சில நாள்களுக்கு முன்னர், வீட்டுக் கதவுகளில் உள்ள பிடிகள் சரியாக இல்லை என்று தோன்றியதாக அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஆனால் அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. அதுவே அவருக்குப் பிரச்சினையாக அமைந்தது.

சிக்கியது எப்படி?

நவம்பர் 24ஆம் தேதி குளிக்கச் சென்ற அவர் கதவை அடைத்தார். குளித்து விட்டு வெளியில் வந்தபோது, கதவுப் பிடி கீழே விழுந்துவிட்டது என்று அவருக்குத் தெரிய வந்தது.

கதவைத் திறக்காத வரைக்கும் தாம் குளியலறைக்குள் சிக்கிவிட்டதை அவர் அப்போதுதான் உணர்ந்நதார்.

"சீனாவில் உள்ள என் பெற்றோருக்கு தினமும் குறுஞ்செய்தி அனுப்புவேன். நான் அப்படி தகவல் அனுப்பாவிட்டால் அவர்கள் என்னைக் காணவில்லை என்று உணர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நினைத்தேன்," என்றார் அவர்.

ஆனால் உதவி கிடைக்க நான்கு நாள்கள் ஆகின.

யாருக்காவது கேட்கும் என்ற நம்பிக்கையில் அதிகாலையிலும் அவ்வப்போது வீட்டுக் கதவில் மணி அடித்தபோதும் குளியலறைக் கதவை அவர் வேகமாகத் தட்டினார். பலன் இல்லை.

திருவாட்டி யாங்கைப் பற்றி தகவல் இல்லை என்று அவரது உறவினர் அளித்த புகாரை காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.

சில நாளாக அவரைக் காணவில்லை என்று விசாரணையில் தெரிந்தவுடன் வீட்டுக் கதவைக் காவல்துறையினர் பலவந்தமாக உடைத்தனர்.

அப்போதுதான் திருவாட்டி யாங் குளியலறையில் இருந்ததை அறிந்து அவரைக் காவல்துறையினர் காப்பாற்றினர்.

இப்போதெல்லாம் குளியலறைக்குள் செல்லும்போதெல்லாம் கதவை முழுவதுமாக அடைப்பதில்லை என்று திருவாட்டி யாங் கூறினார்.