திறன்களையும் வேலைகளையும் மேற்பார்வையிடும் புதியதோர் அரசாங்க ஆணை பெற்ற கழகமாக, ‘சிங்கப்பூர் ஊழியரணி’ (Workforce Singapore), ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ (SkillsFuture Singapore) ஆகியவை இணையும் எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
வேலைகளுக்கும் திறன்களுக்குமான மேலும் ஒருங்கிணைந்த சூழலை அமைப்பதே இதன் நோக்கம் என்று பிரதமர் வோங், வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
பொருளியல் கட்டமைப்பின் வேகமான உருமாற்றத்திற்கு ஏற்ப துரித நடவடிக்கை எடுக்க இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனிதவள அமைச்சும் கல்வி அமைச்சும் இந்தப் புதிய அமைப்பை இணைந்து மேற்பார்வையிடும். அமைப்பின் பெயர், தொடக்க தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
“மாறிவரும் தொழில்நுட்பத்திற்கும் துரிதமான வேலை மாற்றங்களுக்கும் இடையே வலுவான ஒத்திசைவு தேவைப்படுகிறது. நமது கட்டமைப்புகள் தங்குதடையின்றிச் செயலாற்ற வேண்டியுள்ளது,” என்று திரு வோங் கூறினார்.
சிங்கப்பூரர்களுக்கான வேலை, திறன் ஆதரவு முறை குறித்த கவனமான பரிசீலனைக்குப் பின்னர் இந்த இணைப்புக் குறித்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய இந்த அமைப்பு, திறன் பயிற்சி, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டுதல், வேலைப் பொருத்தம் (Job matching) ஆகிய சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் மையமாகத் திகழும் என்றும் திரு வோங் கூறினார்.
வாழ்க்கைத் தொழிலைத் திட்டமிடுவது முதல் திறன் வளர்த்தல் வரை, ஊழியர்களுக்கும் வேலை தேடுவோருக்கும் இந்த ஆதரவு தங்குதடையின்றி கிடைக்கும் என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வரவுசெலவுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று திரு வோங் கூறினார்.
இந்த இணைப்பு, சிங்கப்பூரின் வேலைகளுக்கும் திறன்களுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று கல்வி அமைச்சும் மனிதவள அமைச்சும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
வேலைகளையும் திறன்களையும் மேற்பார்வையிடும் ஒரே அமைப்பு, துரிதமான பதில் நடவடிக்கைக்கு வகைசெய்யும் என்றும் அது குறிப்பிட்டது.
மேற்கூறப்பட்ட இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணையும்வரை, சிங்கப்பூரர்கள் தொடர்ந்து அவற்றின் சேவைகளைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
பயிற்சிச் சூழல் கடந்த பத்தாண்டுகளில் மாற்றம் கண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் வோங், ‘வேலைக்கு முந்திய கல்வி’ (Pre-employment education) என்பதிலிருந்து ‘வாழ்நாள் கற்றலுக்கு’ (Lifelong learning) கவனம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இன்று இந்த இலக்கை நாம் அடைந்துள்ளோம்,” என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

