440க்கும் மேற்பட்ட சிங்கப்பூர், வெளிநாட்டுப் படைப்பாளர்கள். 220க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள். முழுமையாக நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்த 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள்.
குடியிருப்பு வட்டாரக் கடைத்தொகுதிகள் உட்பட சிங்கப்பூரின் 20 வெவ்வேறு பொது, அன்றாடம் செல்லும் இடங்களுக்கிடையே அதிகரித்த சமூகத் தொடர்பு முயற்சிகள். இவை யாவும் இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் இடம்பெற்றன.
‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ ஏற்பாட்டில் 28வது முறையாக நடைபெற்ற இவ்விழா, ‘வருங்காலப் பொருள்களின் உருவம்’ (Shape of Things to Come) என்ற கருப்பொருளில் நவம்பர் 7 முதல் 16ஆம் தேதிவரை நடைபெற்றது. கதைசொல்லல் மூலம் பார்வையாளர்களுக்கு வருங்காலத்தைப் பற்றிக் கனவு காணவும், கேள்விகள் எழுப்பவும் அது வாய்ப்பளித்தது.
இவ்விழா சமூக ஈடுபாட்டை அதிகரித்ததுடன் எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை (SG Culture Pass) வாயிலாக அதிகமானோரை ஈர்த்தது.
விழாவில், முதல் முறை வருகையாளர்கள் பலரைக் காண முடிந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்றோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
தலைமுறைகளுக்கு இடையிலான சமூகத்தின் கதைகளை உயிர்ப்பிக்கும் ‘ஸ்டோரீஸ் அக்ராஸ் ஜெனரேஷன்ஸ் (Stories Across Generations)’, ஸ்னிப்பெட்ஸ் ஆஃப் த ஃப்யூச்சர் (Snippets of the Future) போன்ற முயற்சிகளின் மூலம் சமூக ஈடுபாடு மேலும் விரிவடைந்தது.
இது போன்ற முயற்சிகள் இலக்கியக் கலையைக் குடியிருப்புப் பகுதிகளுக்கு கொண்டுவந்து ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களை இலக்கியத் தளங்களாக உருமாற்றுகின்றன.
மேலும், இவ்விழாவில் முதல் முறையாகச் சீன, மலாய், தமிழ் மொழிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நேரடி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.
‘நாவல்களின் நகர்வுகள்: சிங்கப்பூர்த் தமிழ் நாவல்களின் வரலாறும் வருங்காலமும்’ நிகழ்ச்சி உட்பட 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் சிங்கப்பூர், வெளிநாட்டுப் படைப்பாளர்கள் மேடையேறினர்.
உடனடி உரைபெயர்ப்பு, செயற்கை நுண்ணறிவின் உதவியுடனான மொழிபெயர்ப்பு ஆகியவற்றின்வழி ஆங்கிலத்தில் நிகழ்நேர நேரடி மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டது.
புதிய, பன்மொழிப் பார்வையாளர்களை ஈர்த்ததுடன், மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் இடையே உரையாடல்கள் மேலும் வலுப்பெற இது உதவியது.
மாறுபட்ட தமிழ்க் கவிதைப் பேச்சுக்குழுவான ‘கவிப்பெருக்கு’ வழங்கிய ‘பெரிதினும் பெரிது கேள்’ (Aspire the Infinite) நிகழ்ச்சி, நவம்பர் 9ஆம் தேதி விக்டோரியா அரங்கில் நடந்தேறியது.
கவிஞர்கள் வெவ்வேறு தலைப்புகளில் தாங்கள் இயற்றிய கவிதைகளை நயம்பட, உணர்வு பொங்க, இசையுடன் கோத்து மேடையில் படைத்தனர்.
கவிநயம், மொழிவளம், குரல்வளம் ஆகியவற்றின்வழி தமிழ்மொழியின் அழகைக் கொண்டாடிய இந்நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது.
“தமிழ்மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்த தமிழ் இலக்கியம் அதன் மாறிவரும் குரல்களின் பன்முகத்தன்மையையும் துடிப்பையும் வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கியது. தமிழ்மொழியின் அழகைக் கொண்டாடுவது மட்டுமன்றி சமகாலப் பிரச்சினைகள், கலாசார உரையாடல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோரை ஒன்று சேர்த்ததில் எனக்குப் பெருமை,” என்றார் தமிழ் நிகழ்ச்சிகளின் காப்பாளர் சித்ரா ரமேஷ்.
அடுத்த ஆண்டுக்கான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நவம்பர் 13 முதல் 22ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
‘இலைமறை காயாக (Hidden in Plain Sight)’ என்பது அதன் கருப்பொருளாக இருக்கும்.
தொடர் மாற்றங்களைக் காணும் தலைமுறையில், தனிநபரின் மதிப்பீடுகள் குறித்துக் கேள்வி எழுப்பவும் இலக்கியங்களிலும் அவற்றுக்கு அப்பாற்பட்டவைகளிலும், ‘உண்மைத் தன்மையை’ எவ்வாறு கட்டமைப்பது, அதற்கு எவ்வாறு மறுவடிவம் கொடுப்பது என்பதைச் சிந்திக்கவும் பார்வையாளர்களுக்கு இவ்விழா அழைப்பு விடுக்கிறது.


