அமெரிக்காவில் சிங்கப்பூர் இளையர் கைது

அமெரிக்காவில் சிங்கப்பூர் இளையர் கைது

2 mins read
மின்னிலக்க நாணய மோசடி தொடர்பில் மத்தியப் புலனாய்வுப் பிரிவு கைது செய்தது
2cee0120-73c9-44d5-a692-742d58abb54f
மலோன் லாம் (இடம்) இரவு விடுதி ஒன்றில் ஆடம்பரமான கேளிக்கை விருந்தில் கலந்துகொண்டதைக் காட்டும் இன்ஸ்டகிராம் ‘ரீல்’ பதிவு. - படங்கள்: பிஎஸ்ஓ, ஐஏஐஎன்டிஇவென்ட்ரிப்பின்/இன்ஸ்டாகிராம்
Google News Preferred Icon

அமெரிக்காவில் வசிக்கும் சிங்கப்பூர் இளையர் ஒருவரை அந்நாட்டு மத்தியப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

திருட்டு, 230 மில்லியன் அமெரிக்க டாலர் (S$297 மில்லியன்) மதிப்பிலான மின்னிலக்க நாணயப் பணமோசடி ஆகியவை தொடர்பில் அவர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

மலோன் லாம் எனும் அந்த இளையருக்கு வயது 20. அவர் மீது செப்டம்பர் 19ஆம் தேதி, ஃபுளோரிடாவின் தென்பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

லாமுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 21 வயது ஜீன்டியெல் செர்ரானோ எனும் ஆடவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருவர் மீதும் தலா இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, இருவரும் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஒருவரை மோசடி செய்து 4,100க்கும் மேற்பட்ட மின்னிலக்க நாணயங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவற்றின் மொத்த மதிப்பு 230 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

திருடப்பட்ட அந்த மின்னிலக்க நாணயங்களை, அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு, பரிவர்த்தனை செய்யத் திட்டமிட்டதாக நீதித்துறை கூறியது.

அதன் மூலம் பெற்ற தொகையை அவர்கள் இருவரும், அனைத்துலகப் பயணங்களுக்கும் இரவு விடுதிகளுக்குச் செல்லவும் சொகுசு வாகனங்கள், கைக்கடிகாரங்கள், நகைகள், ஆடம்பரக் கைப்பைகள் போன்றவற்றை வாங்குவதற்கும் லாஸ் ஏஞ்சலிசிலும் மியாமியிலும் வாடகை வீடுகளுக்கும் செலவிட்டதாகக் கூறப்பட்டது.

லாம், செர்ரானோ இருவருடன் வீர் சேத்தல் என்பவரும் இணைந்து ஜெனிசிஸ் வர்த்தக நிறுவனத்திற்குக் கடன் தந்த ஒருவரை மோசடி செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.

கூகல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவுப் பிரிவு என்ற போர்வையில் அவரைத் தொடர்புகொண்டு இரண்டு அம்ச அனுமதியை மாற்றியமைக்கத் தூண்டியதாகவும் கூறப்பட்டது.

இது குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்