பினாங்கில் சிங்கப்பூரர் கடத்தல்; நீதிமன்ற விசாரணைக்குக் கோரிய சீன நாட்டவர்

பினாங்கில் சிங்கப்பூரர் கடத்தல்; நீதிமன்ற விசாரணைக்குக் கோரிய சீன நாட்டவர்

1 mins read
d4ddb1cc-a338-41c7-a048-0e7bac137990
சீனாவைச் சேர்ந்த நால்வர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவரை பினாங்கில் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - படம்: த ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவரைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட சீன நாட்டவர் நால்வர், மலேசியாவின் பினாங்கு மாநில செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நீதிமன்ற விசாரணை கோரினர்.

சந்தேக நபர்கள் நால்வரில் ஒரு பெண்ணும் அடங்குவார். குற்றஞ்சாட்டப்பட்ட லியூ டிங் ஜுன், 46, ஹுவாங் ஜின், 39, வாங் ஹாவ் யு, 32, குவான் சிக்கி, 24, ஆகியோர் மாண்டரின் மொழியில் தங்களின் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற விசாரணை கோரினர்.

அந்த நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து 72 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கடத்தி, பாயான் லேப்பாசில் உள்ள பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அவரைத் தவறுதலாகத் ‘தடுத்து வைத்த’தாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. அச்சம்பவம் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி பிற்பகல் 4.15 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கடத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30லிருந்து 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் சவுக்கடியும் அவர்களுக்கு விதிக்கப்படக்கூடும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அலோர் சிட்டார் நகரில் தாமான் அமிராவில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் கடத்தப்பட்ட இருவரை மீட்க காவல்துறை முறியடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அதில் காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அறுவர் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து பினாங்கு கடத்தல் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
பினாங்குசிங்கப்பூர்மலேசியாகடத்தல்குற்றச்சாட்டுவிசாரணைநீதிமன்றம்வழக்கு