பொறியியல் வேலையைத் தேடி 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் சென்ற சிங்கப்பூரர் ஈவன் இர்வானுக்கு அந்த நோக்கம் நிறைவேறாமல் போனது.
ஆனால் அந்தத் தோல்வி, வெற்றிக் கதையின் தொடக்கமாக அமைந்தது. தற்போது, அவர் பிரான்சின் ஒரு சிறிய கிராமத்தில் ரொட்டி வியாபாரம் நடத்தி வாடிக்கையாளர்கள் பலராலும் நாடப்படுகிறார்.
51 வயதான ஈவன், தம் 28 வயதில் பிரெஞ்சு மனைவியுடன் பிரான்சுக்குச் சென்று பொறியாளராகப் பணிபுரிய விரும்பினார். ஆனால், அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
நிலைமையைச் சுதாரித்துக்கொண்டு தனது பாதையை மாற்றிக்கொண்டு, தற்காலிக வேலைகளைச் செய்து வருவாய் ஈட்டியதோடு, பேக்கிங் வகுப்பு ஒன்றிலும் சேர்ந்தார்.
பின்னர் லியோன் நகரில் ஒரு பேக்கரியில் அவருக்கு வேலை கிடைத்தது. ஈராண்டுகளுக்குப் பிறகு, திரு ஈவன் டூலூஸ் நகரத்திலிருந்து சுமார் இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் உள்ள ஒரு தொலைதூர கிராமமான செயின்ட்-ராபர்ட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.
18 ஆண்டுகளுக்கு முன்னதாக அங்கு இருந்த ஒரே ரொட்டிக் கடையான ‘Le Fournil de Saint-Robert’ ல் கிடைத்த வேலை வாய்ப்பைத் திரு ஈவன் ஏற்றுக்கொண்டார். திரு ஈவன், அங்கு அவரது மனைவி சோஃபியும் அவர்களது இளம் மகன் காலிஸும் (இப்போது 19 வயது), அவருடன் குடியேறினர். காலிஸ் தற்போது பிரான்சில் ஒரு சமையல்காரராக (sous chef) பயிற்சி பெற்று வருகிறார்.
மலேசிய ஊடகமான சேய்ஸ் (Says), டிக்டாக் பக்கத்தில் செப்டம்பர் 1ல் திரு ஈவனைப் பற்றிய ஒரு காணொளி வெளியிட்டதை அடுத்து அவரது கதை வெளிச்சத்திற்கு வந்தது. தீயாகப் பரவிய அந்தக் காணொளி, 562,000-க்கும் மேற்பட்ட பார்வைகளும் 29,000 விருப்பங்களும் கிட்டத்தட்ட 500 கருத்துகளும் கிடைத்தன.
“முதலில், கிராம மக்கள் ஒரு ஆசிய முகம் பேக்கரியை நடத்துவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்,” என்று திரு ஈவன் டி.என்.பி-யிடம் கூறினார். “பிரான்சில் ரொட்டி என்பது ஒரு சாதாரண விஷயம் அல்ல” என்றும் அவர் விளக்கினார்.
“நான் செய்யும் பாரம்பரிய புளிப்பு மாவு ரொட்டி (sourdough bread) பிரெஞ்சு மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அது பேட்ரிமோண்ட் (‘patrimont’) - பிரெஞ்சு மொழியில் பாரம்பரியம். மக்களால் பெரிதாக மதிக்கப்படும் கலை அது. எனவே, அதை நான் மிகவும் மரியாதையுடன் செய்ய வேண்டும்” என்றும் திரு ஈவன் கூறினார்.
நாளடைவில் இவரது நளபாகம், புகழைத் தந்தது. “நான் நல்ல ரொட்டி செய்கிறேன், அதனால்தான் அவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்று அவர் தன்னடக்கத்துடன் கூறினார்.

