மலேசியாவில் பணியாற்றிவரும் சிங்கப்பூர் நடிகர் ஆரன் அசிஸ், அக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் பாலஸ்தீனம் பற்றிய கருத்துகளைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் பகடிவதைக்கு ஆளானார்.
சமூக ஊடகத்தில் இருந்த அந்தப் பதிவு தற்போது அகற்றப்பட்டுவிட்டது. அந்தக் காணொளியில் ஆரன் பாலஸ்தீனத்தில் ‘பேச்சைவிட செயலே முக்கியம்’ என்ற தோரணையில் பேசியிருந்தார். அவற்றின் சில பகுதிகளை மட்டும் பயன்படுத்தி கருத்துப் பதிவாளர் ஷரினா ரிச்சி, மலேசிய சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
பகிரப்பட்ட காணொளி, மீள்தன்மையை இலக்காகக் கொண்ட உலகளாவிய சுமுட் மனிதாபிமான உதவியைக் குறைகூறுவதுபோல் தோன்றியது.
மலேசியா உள்பட ஒன்பது உலக நாடுகள் காஸாவுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரை, உதவிப்பொருள்களை கொண்டுசெல்லும் திட்டம் ‘குளோபல் சுமுட் ஃபுளோடிலா’ என்று அழைக்கப்படுகிறது. அந்த திட்டத்தில் 23 மலேசிய தொண்டூழியர்கள் பங்கெடுத்து அண்மையில் இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டனர்.
சர்ச்சைக்குறிய காணொளி உடனடி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆரன் சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டும் என்று பலர் அறைகூவல் விடுத்ததுடன் 2017ஆம் ஆண்டில் பாஹாங் மாநில சுல்தான் அவருக்குச் சூட்டிய டத்தோ பட்டத்துக்கு அவர் தகுதியற்றவர் எனவும் கூறினர்.
ஆரன் சமூக ஊடகத் தளங்களில் செப்டம்பர் 19ஆம் தேதி பேசியிருந்த முழு நேர்காணலை அக்டோபர் 3ஆம் தேதி வெளியிட்டார். அதில் சுமுட் திட்டத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றார்.
மேலும் “காஸாவுக்கு எந்த வகையிலும் ஆதரவு தராமல் இருக்கப்போவதில்லை,” என்று 49 வயது ஆரன் மலாய் மொழியில் எழுதிப் பதிவிட்டுள்ளார்.
கருத்துப் பதிவாளர் ஷரினா அவரது மன்னிப்புக் காணாளியை அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டார். அவதூறு பரப்பும் எண்ணத்துடன் தாம் ஆரனின் காணொளியைப் பகிரவில்லை என்று அதில் ஷரினா கூறினார். ஆரனின் மனைவி திருமதி டியானா ஹாலிக், 43, தங்களது குடும்பம் பகடிவதையால் பெரும் பாதிப்படைந்துள்ளது என்று சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தம்பதிகள் இருவரும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக அறியப்படுகிறது. எமிர் மஹ்முட் அன்ட் கோ என்ற மலேசிய சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் மஹமுட் ஜுமாட் என்பவருடன் நிற்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
“ஒருவரின் குடும்ப ஒற்றுமை, மனநலன், மரியாதை ஆகியன இதுபோன்ற அவதூறுகளால் பெரும் பாதிப்படைகின்றது. எனவே, மன்னிப்புடன் பகடிவதையை முடித்துக்கொள்ளமுடியாது. மானநஷ்ட வழக்கை நடத்தி இழப்பீடு கோருவதன்றி வேறு வழியில்லை” என்று வழக்கறிஞர் மஹமுட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.