மின்சிகரெட் கும்பலுடன் தொடர்பு; வியட்னாமில் சிங்கப்பூரர்கள் நால்வர் கைது

மின்சிகரெட் கும்பலுடன் தொடர்பு; வியட்னாமில் சிங்கப்பூரர்கள் நால்வர் கைது

1 of 2
படம்: ஃபேஸ்புக்/Tạp chí An ninh mạng Việt Nam
படம்: ஹோ சி மின் நகரக் காவல்துறை

02 Aug 2026 - 12:50 pm

1 mins read

எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்து கடத்திவந்த கும்பலுக்கு எதிரான நடவடிக்கையின்போது, சிங்கப்பூரர் ஒருவரை வியட்னாமின் ஹோ சி மின் நகரக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஓ ஜியாங் ஃபோங் என்ற அந்த ஆடவர் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்தவர் எனக் கூறப்பட்டது.

மெல்வின் டான் ஜுன்ஜீ என்ற சிங்கப்பூரரும் ஹூ ஜியா ஹோ என்ற மலேசியரும் அந்தப் போதைப்பொருள் கும்பலை வழிநடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஓ ஜியாங் ஃபோங் மின்சிகரெட்டுகளில் நிரப்புவதற்கான எட்டோமிடேட் திரவத்தை விநியோகித்ததாகக் கூறப்பட்டது.

அம்மூவரும் ஜூலை 17ஆம் தேதி பிடிபட்டதாக ‘வாய்ஸ் ஆஃப் வியட்னாம்’ ஊடகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் சட்டவிரோதக் கும்பல் தொடர்பாகக் காவல்துறையினர் இதுவரை 76 பேரிடம் விசாரணை நடத்தி, 65 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிங்கப்பூரர்கள் நால்வர் உட்பட பத்து வெளிநாட்டினரும் அடங்குவர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருள் கலந்த கிட்டத்தட்ட 2,000 மின்சிகரெட்டுகளையும் 140 மில்லிலிட்டர் எட்டோமிடேட் திரவத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

முன்னதாக, ஜூலை 16ஆம் தேதி வியட்னாம் சென்ற ஓ, ஜூலை 18ஆம் தேதி சிங்கப்பூர் திரும்ப வேண்டியவர். ஆனால், அவர் மாயமானதை அடுத்து, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இணையத்தில் உதவி கோரியிருந்தனர். ஜூலை 17ஆம் தேதியன்று ஓ வியட்னாமிற்குள் நுழைந்ததை ஹோ சி மின் நகரிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகம் உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்போதைப்பொருள்எட்டோமிடேட்வியட்னாம்சிங்கப்பூர்