சிங்கப்பூரரான எல்ட்ரிக் கோ மீது, பல மில்லியன் மதிப்பிலான ஒயின் முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
50 வயதாகும் கோ, பிரீமியம் லிகுவிட் அசெட்ஸ் எனும் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.
காவல்துறை 2011ஆம் ஆண்டு, தனது நிறுவனத்தின் மீது விசாரணையைத் தொடங்கிய சில நாள்களில் அவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேறிவிட்டார்.
இந்த ஆண்டு (2024) சிங்கப்பூர் திரும்பிய அவரைக் காவல்துறை கைது செய்ததுடன் மே மாதம், அந்த ஒயின் திட்டம் தொடர்பான மோசடிக் குற்றச்சாட்டுகளைக் கோ மீது சுமத்தியது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி அவர் மீது மேலும் 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முதலீட்டாளர்களுக்கு 2007ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் இடையே ‘என் பிரீமியர்’ ஒயினை விற்க அவரது நிறுவனம் உறுதிகூறியிருந்தது.
ஆனால் ஒயினைப் போத்தல்களில் நிரப்பும் வரை சில ஆண்டுகளுக்கு முதலீட்டாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று அத்திட்டத்தின் நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் முதலீட்டாளர்கள் சார்பில் வெளிநாட்டுக் கிடங்குகளில் பல ஆண்டுகளுக்கு நிறுவனம் அந்த ஒயினைச் சேமித்து வைக்கும் என்றும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் கோ, கூ ஹன் ஜெட் என்பவருடன் இணைந்து முதலீட்டாளர்களை ஏமாற்றிப் பணம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட கிட்டத்தட்ட $12.7 மில்லியன் தொகையை, நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து வேறொரு நிறுவனத்தின் வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு கோ மாற்றியதாகக் கூறப்பட்டது.
வழக்கு செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


