ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இரவு ஏற்பட்ட விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த அச்சிறுவன், விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் காயங்களுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பெர்மாஸ் ஜெயாவை நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு காருடன் லாரி ஒன்று இரவு 10.34 மணிக்கு மோதிக்கொண்டதில் லாரியை ஓட்டிய 57 வயது ஆடவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாசாயிலிருந்து நகர மையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த அந்த ஆடவர், பின்னர் சிங்கப்பூரில் பதிவான காருடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
அந்த காரை 44 வயது ஆடவர் ஓட்டியதாகவும் காரில் அவருடன் மேலும் நால்வர் இருந்ததாகவும் அறியப்படுகிறது. பயணிகள் இரண்டு வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டது. காரில் இருந்தவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள். எஞ்சிய ஒருவர் இந்தோனீசிய நாட்டவர்.
வாகனங்கள் மோதிக்கொண்ட வேகத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சிறுவன், வாகனத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து மார்ச் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 3 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தடுத்து வைக்கப்பட்ட லாரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், அந்த ஆடவரிடம் வாகனம் ஓட்டும் உரிமம் இல்லை. லாரிக்கான சாலை வரியும் காலாவதியாகிவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.