கணினி ஊடுருவலால் முறியடிக்க முடியாத புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் சகோதரர்கள்

கணினி ஊடுருவலால் முறியடிக்க முடியாத புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் சகோதரர்கள்

2 mins read
a3061b8f-c997-4715-acb3-8b08abaee19f
சிங்கப்பூரர்களான சகோதரர்கள் கென் லின் (இடம்), லிம் மெங் லியாங் புதிய தொழில்நுட்பத்தை உலக அளவில் எடுத்துச் செல்ல விரும்புகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரைச் சேர்ந்த இரு சகோதரர்கள், தீர்க்க முடியாத கணிதப் புதிர்களைப் பயன்படுத்தி கணினி ஊடுருவிகளால் முறியடித்து நுழைய முடியாத அதிநவீனத் தரவுப் பாதுகாப்பு முறையை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.

சிங்கப்பூரரான லிம் மெங் லியாங், 38, தீர்க்கவே முடியாது என்று உலகக் கணிதவியலாளர்களால் கருதப்படும் ‘டயோஃபாண்டைன் சமன்பாடுகள்’ குறித்த ஆய்வில் வல்லுநர் ஆவார்.

இந்தச் சிக்கலான கணித முறையைப் பயன்படுத்தி, தரவுகளைப் பாதுகாக்கும் புதிய வழிமுறைக்காக 2022ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கக் காப்புரிமையைப் பெற்றார்.

“அந்தக் காப்புரிமையை சட்டமிட்டுச் சுவரில் மாட்டியிருக்கலாம். ஆனால், எனது அண்ணனுடன் விரிவாகக் கலந்தாலோசித்த பிறகு இதில் புதிய உலகைப் படைக்க முடிவெடுத்தோம்,” என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பட்டதாரியான லிம் கூறினார்.

இதையடுத்து, கடந்த 2023ஆம் ஆண்டில் லிம், தனது மூத்த சகோதரரான கென் லின்னுடன் கைகோத்தார். இதற்காக கென் லின், 15 ஆண்டுகள் நிதித்துறையில் பணியாற்றிய முக்கியப் பதவியிலிருந்து விலகினார்.

இருவரும் இணைந்து ‘ஏர்ஸ் அப்ளைட் குவாண்டம் டெக்னாலஜி’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர்.

இந்தச் சகோதரர்களின் புதிய கண்டுபிடிப்பு, தனியார் முதலீட்டாளர்கள், ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ போன்ற உள்ளூர் அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இவற்றின் மூலம் இதுவரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$2.6 மில்லியன்) அதிகமான நிதியை அவர்கள் திரட்டியுள்ளனர்.

தங்களுடைய தொழில்நுட்பத்தை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல இன்னும் எட்டிலக்கத் தொகையை மூலதனமாகத் திரட்ட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அமெரிக்கா, சிங்கப்பூர் அல்லது ஜப்பான் பங்குச் சந்தைகளில் தங்களது நிறுவனத்தைப் பட்டியலிடவும் அவர்கள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் உருவாக்கிய முதன்மைத் தயாரிப்பான ‘லயன்கார்ட்’ என்ற கைப்பேசி செயலி தற்போது சந்தைக்கு வந்துள்ளது. சாதனங்களிலோ அல்லது மேகக்கணின் தளங்களிலோ சேமிக்கப்படும் கோப்புகளைப் பாதுகாப்பதே இதன் முக்கியப் பணியாகும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் ‘குவாண்டம் கணினிகளால்’ ஏற்படக்கூடிய இணைய அச்சுறுத்தல்களைக்கூட முறியடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு மாதக் கட்டணம் $388 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம், நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்