ஜோகூர் பாருவில் கடுமையாகப் பெய்த மழைக்கு இடையே கார் ஓட்டிய சிங்கப்பூரர் ஒருவர் கட்டுபாட்டை இழந்து அங்குள்ள தரைவீடுகளில் மோதியதாகக் கூறப்படுகிறது.
புகழ்பெற்ற கேஎஸ்எல் சிட்டி (KSL City) கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள தாமான் செஞ்சுரி குடியிருப்பில் நவம்பர் 24ஆம் தேதி நேர்ந்த சம்பவத்தை ஜோகூர் பாரு தெற்கு வட்டாரக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
ஜாலான் ஹரிமாவ்வில் உள்ள நான்கு தரை வீடுகளின்மேல் 32 வயது ஆடவர் ஓட்டி சென்ற அவுடி கார் கட்டுபாட்டை இழந்து மோதியதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை சொன்னது.
விபத்தில் வீடுகளின் முன்வாசல், சுவர், மழைத் திரை ஆகியவை சேதமடைந்தன.
வெள்ளை அவுடி கார் ஒன்று வீட்டின் சுவரில் மோதியவாறு நிற்கும் காட்சிகள் எஸ்ஜிஆர்வி ஃப்ரண்ட் மேன் (SGRV Front Man) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன.
சம்பவம் நேர்ந்தபோது இடி போன்ற சத்தத்தைக் கேட்டதாகப் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களில் ஒருவர் ஷின் மின் டெய்லி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
முன்வாசல் வழியாக ‘பறந்து’ வந்த அவுடி கார் இரண்டு வீடுகளுக்கு இடையிலான சுவரில் மோதி நின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காரின் கண்ணாடியை உடைத்துத்தான் அதை ஓட்டிய ஆடவர் தப்பித்து வெளியேறியதாக வீட்டு உரிமையாளர் கூறினார். அவரது காலிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும் பெரிய காயம் எதுவும் இல்லை என்றும் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
லேசான காயங்களுடன் தப்பிய ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
விபத்து நேர்ந்தபோது ஆடவர் மதுபோதையில் இல்லை என்பது பரிசோதனை வழி உறுதியானது.
அதிகாரிகள் விசாரணை தொடர்கிறது.

