துவாசில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதியில் அல் காய்தா அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் குழுவுடன் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் பங்ளாதேஷ் சமயப் போதகரை மையமாகக் கொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாகச் சிங்கப்பூர் ஆடவர்மீது வியாழக்கிழமை (மார்ச் 27) குற்றஞ்சாட்டப்பட்டது.
துவாஸ் சவுத் அவென்யூ 4க்கு அருகே டெக் பார்க் கிரசென்டில் உள்ள லென்டானா தங்கும் விடுதியில் 51 வயது அப்துஸ் சத்தார் சர்ச்சைக்குரிய அந்த நிகழ்ச்சிக்குக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
வேலை அனுமதி அட்டையின்றி சமயப் போதகராக வெளிநாட்டினர் ஒருவரை சிங்கப்பூரில் நடவடிக்கைகளை நடத்துவதற்கு உடந்தையாக இருந்தது, காவல்துறையின் உரிய அனுமதியின்றி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது, உரிமம் இன்றி பொது கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் சத்தார்மீது சுமத்தப்பட்டன.
சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியை நடத்தும் எஸ்பிஎம் இலெக்டிரிக்கல், ஆட்டோமேஷன் (SBM Electrical & Automation) நிறுவனத்தில் சத்தார் இயக்குநராகப் பணிபுரிந்ததாக சிங்கப்பூர்க் காவல்துறையும் மனிதவள அமைச்சும் தெரிவித்தன.
தங்குவிடுதியில் தங்காத ஆள்கள் விடுதிக்குள் வந்துசென்ற விவரங்களை எஸ்பிஎம் இலெக்டிரிக்கல், ஆட்டோமேஷன் நிறுவனம் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி சரிவர பதிவுசெய்யாததை அடுத்து அதன்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஹம்சா முகமது அமிர் (என்ற) அமிர் ஹம்சா, உல்லா முகமது நீமட் ஆகிய இரண்டு பங்ளாதேஷ் ஆடவர்களை ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சமயப் பொதுக் கூட்டத்துக்கு சத்தார் அழைத்ததாகக் கூறப்படுகிறது.
பொதுக் கூட்டத்துக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் அமிர் சமயப் போதனை செய்ததாகவும் உல்லா பாடல்கள் பாடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் அமிர் சிங்கப்பூரைவிட்டுச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
அமிர் பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் போதித்ததாக மனிதவள அமைச்சின் முன்னைய அறிக்கை குறிப்பிடுகிறது.
சத்தார்மீதும் அவர் வேலை செய்த நிறுவனம்மீது உள்ள வழக்கு நீதிமன்றத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.


