நேப்பாளத்தில் சிங்கப்பூர் மலையேறி மரணம்

நேப்பாளத்தில் சிங்கப்பூர் மலையேறி மரணம்

படம்: அடோபி ஸ்டோக்

17 Sep 2026 - 6:32 pm

2 mins read

நேப்பாளத்தில் சிங்கப்பூர் மலையேறி வியாழக்கிழமை (செப்டம்பர் 17) காலை உயிரிழந்தார். அந்த 50 வயது மலையேறி மனாஸ்லு மலையில் இருந்தபோது மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் புதிய உயரத்துக்கு உடலைப் பழக்கப்படுத்தும் மலையேற்றத்தை முடித்துவிட்டு கீழே இறங்கியபோது ஏற்பட்ட உடல்நலக் குறைவால், ஏறத்தாழ 6,000 மீட்டர் உயரத்தில் உயிரிழந்ததாக நேப்பாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மரணம் குறித்து ‘8கே எக்ஸ்பெடிஷன்ஸ்’ எனும் மலையேற்ற நிறுவனம் தங்களுக்குத் தகவல் அளித்ததாக நேப்பாளச் சுற்றுப்பயணக் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

அந்த சிங்கப்பூர் மலையேறியின் மரணத்தை நேப்பாளச் சுற்றுப்புற வாரியமும் உறுதிப்படுத்தியது.

மனாஸ்லு மலையின் ‘கேம்ப் டூ’ பகுதியிலிருந்து புதன்கிழமை (செப்டம்பர் 17) காலையில் அவர் கீழே இறங்கிக் கொண்டிருந்ததாக ‘8கே எக்ஸ்பெடிஷன்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் லாக்பா ஷெர்பா தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

ஓய்வெடுப்பதற்காக அவர் உட்கார்ந்த ஒரு நிமிடத்திற்குள் அவருடைய நாடித்துடிப்பு நின்றுவிட்டதாக லாக்பா கூறினார்.

மருத்துவர் ஒருவரும் சக மலையேறிகளும் அவருக்குத் உடனடிச் சிகிச்சை அளித்தபோதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக ‘தி ஹிமாலயன் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. மேலும், அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவரது உடலை நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர் அனுப்பப்படுவதாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.

கடல் மட்டத்திலிருந்து 8,163 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மனாஸ்லு மலை, உலகின் எட்டாவது மிக உயர்ந்த மலையாகும். இது காத்மாண்டுவிலிருந்து வடமேற்குப் பகுதியில் கிட்டத்தட்ட 140 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்