தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எவரெஸ்ட் உச்சிக்குச் சென்ற சிங்கப்பூரரைக் காணவில்லை

2 mins read
9c7e1be4-4cac-4682-9eb7-561aeeffa7ed
படம்: change.org -

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சிங்கப்பூரர் ஒருவர் காணாமல் போனார்.

வெள்ளிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தின் தெற்கு உச்சியில் சுமார் 8,500 மீட்டர் உயரத்தில் இருந்தபோது ஸ்ரீநிவாஸ் சைனிஸ் தத்தாதிராயா, 39, காணாமல் போனதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அங்கிருந்துதான் அவர் கடைசியாக அடித்தள முகாமுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட்டதாக அவர் தனது மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு அவரைப் பற்றிய தகவல் இல்லை.

ஜோன்ஸ் லாங் லசால் எனும் சொத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஸ்ரீநிவாஸ் ஏப்ரல் 1ஆம் தேதி எவரெஸ்ட் மலையேற புறப்பட்டுச் சென்றார். ஜூன் 4ஆம் தேதி அவர் வீடு திரும்பு வதாக இருந்தது.

கணவர் காணாமல்போனது குறித்து ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் பேசிய அவரது மனைவி சுஷ்மா சோமா, 36, வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது குரலை கடைசியாகக் கேட்டதாகத் தெரிவித்தார்.

"செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் சிகரத்தை எட்டி விட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் தன்னால் திரும்ப முடியாமல் போகலாம் என்ற கெட்ட செய்தியையும் அவர் தெரிவித்தார்," என்றார் சுஷ்மா.

அதிக உயரத்தில் ஏற்படக் கூடிய கடுமையான நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக கணவர் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சனிக்கிழமை விடியற்காலை 2.00 மணியளவில் அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகளும் மற்றொரு நபரும் மலை உச்சியிலிருந்து திரும்பிவிட்டனர். ஆனால் ஸ்ரீநிவாஸ் இன்னமும் திரும்பவில்லை.

மலை உச்சியில் இருக்கும் போது 'ஹேப்' (Hape) எனப்படும் நுரையீரலில் ஏற்படும் திரவப் பெருக்கும் 'ஹேஸ்' (Hace) எனப்படும் மூளையில் ஏற்படும் திரவப் பெருக்கும் மரணத்தை விளைவிக்கலாம் என்று தேசிய பல் கலைக்கழக மருத்துவமனையின் ஆலோசகரான டாக்டர் குமரன் ராசப்பன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

திரு ஸ்ரீநிவாஸை பாதித்த தாகக் கூறப்படும் 'ஹேஸ்', மனக்குழப்பம், பிரமை, குளறும் பேச்சு, மங்கிய அறிவாற்றல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். உயரமான மலையில் இருக்கும் ஒருவருக்கு இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை," என்றும் அவர் கூறினார்.

டாக்டர் குமரனும் 2012ல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்துள்ளார்.

இந்நிலையில் காணாமல் போனதாக அஞ்சப்படும் ஸ்ரீநிவாசை பத்திரமாக மீட்டுவர சம்பந்தப்பட்ட நாடுகள் உதவ வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் மனு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

மனுவிற்கான இணையப்பக்கம்: https://www.change.org/p/let-s-bring-shrinivas-back?source_location=search

(கூடுதல் செய்தி கி. ஜனார்த்தனன்)

குறிப்புச் சொற்கள்