சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் அவற்றின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ளும்படி சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு புதன்கிழமை (ஏப்ரல் 15) எச்சரித்துள்ளது.
ஆந்திரோப்பிக் (Anthropic) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் புதிய அதிநவீன ‘ஃபிரான்டியர் மாடல்’ எனப்படும் மேம்பட்ட மாதிரிக் கட்டமைப்பு ஒன்றைச் சோதிக்கத் தொடங்கியுள்ளதை முன்னிட்டு அமைப்பு அவ்வாறு சொன்னது.
அந்த அதிநவீன கட்டமைப்பு, கணினிகளில் உள்ள தற்போதைய மென்பொருளை ஊடுருவும் ஆற்றல்கொண்டது.
எனவே, முக்கியமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மென்பொருளின் பாதுகாப்பை நிறுவனங்கள் அனைத்தும் மேம்படுத்தும்படியும் பல அம்சப் பாதுகாப்பை அறிமுகம் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டன.
அதிநவீன கட்டமைப்பு தற்போதைக்குத் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்றபோதும் எதிர்காலத்தில் ஏதேனும் ஊடுருவல் நடப்பதைத் தவிர்ப்பதற்காக ஆலோசனை விடுத்ததாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டது.
நிறுவனங்கள் அவற்றின் மென்பொருள் கட்டமைப்புகளில் உடனடியாகப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவேண்டும் என்ற அமைப்பு, ஊடுருவல் ஏற்பட்டால் மிகப் பெரிய பாதிப்புகளை அவை சந்திக்க நேரிடும் என்றது.
பொது இணையத் தளங்களிலிருந்து எளிதில் ஊடுருவக்கூடிய நிலையில் உள்ள மென்பொருள்களின் உருவாக்கம், அவற்றின் பயன்பாடு ஆகியவற்றை நிறுவனங்கள் உடனடியாக மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு மட்டும் மென்பொருள்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும் அமைப்பு ஆலோசனை வழங்கியது.
ஆந்திரோபிக் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் அதன் ஆக அண்மைய செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பைச் சோதிக்கத் தொடங்கியதாகத் தகவல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்வதற்குப் பதிலாகக் கிட்டத்தட்ட 50 நிறுவனங்களிடம் ஆந்திரோபிக் நிறுவனம் அதன் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பைச் சோதிக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மிகவும் விரைவாக இருப்பதால் அதைப் பாதுகாப்பாகச் செயல்படுத்துவோருக்கு அப்பால் பிற விவகாரங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்று அமைப்பு சுட்டியது.
அதன் மூலம் பொருளியல்கள், பொதுப் பாதுகாப்பு, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நீண்டகால அடிப்படையில், கட்டமைப்புப் போக்குவரத்து, பயனர் நடத்தை போன்ற முக்கியத் தாக்குதல் பாதைகளை நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சிறப்புரிமை பெற்ற கணக்குகள் மற்றும் முக்கியமான அமைப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றில் நடக்கும் அதிக அபாயகரமான செயல்பாடுகள் மீது கண்காணிப்பைக் குவிக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

