கோலாலம்பூர் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர்த் தம்பதி, டிசம்பர் 22ஆம் தேதி நடந்த விரைவுச்சாலை விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு எட்மண்ட் ஆங், 72, அவரது மனைவி கேத்தரின் இங், 70, இருவரும் கிறிஸ்துமசை உறவினருடன் கொண்டாட கோலாலம்பூர் சென்றதாகக் கூறப்பட்டது.
அவர்கள் பயணம் செய்த சொகுசு டாக்சி, வேதிப்பொருள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியதில் மூத்த தம்பதியும் டாக்சி ஓட்டுநரும் மாண்டனர்.
ஆங் தம்பதியரின் குடும்பத்தினர் டிசம்பர் 28ஆம் தேதி இத்தகவலை வெளியிட்டனர்.
ஆங் தம்பதியின் இளைய மகனான 36 வயது வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஆங், தன் பெற்றோர் இதற்குமுன் இதேபோல் பலமுறை பயணம் செய்ததுண்டு என்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு எட்மண்ட் ஆங், ‘ஐபிஎம்’, ‘ஆரக்கிள்’ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றியவர். திருவாட்டி இங் இல்லத்தரசி. அவர்கள் எப்போதும் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு விமானத்தில் சென்று, விமான நிலையத்திலிருந்து சொகுசு டாக்சி மூலம் நகருக்குள் செல்வது வழக்கம் என்று கூறப்பட்டது.
இம்முறை திருவாட்டி இங்கின் மருமகனின் குடும்பத்தினருடன் கிறிஸ்துமசைக் கொண்டாடத் திட்டமிட்டு அவர்கள் கோலாலம்பூர் சென்றனர்.
திருவாட்டி இங்கிடமிருந்து தகவல் இல்லாததால் மருமகன், அவர்கள் தங்கவிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு மூத்த தம்பதி குறித்த பதிவுகள் ஏதும் காணப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திரு ஆங்கின் கைப்பேசிக்கு அழைத்தபோது செர்டாங் காவல் நிலைய அதிகாரி, ஆங் தம்பதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால், பின்னர் அவர்கள் மாண்டதாகக் கூறப்பட்டது.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.