நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலையடிவார முகாமிற்கு மலையேற்றப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரர் உடல்நலக் குறைவால் நவம்பர் 15ஆம் தேதி உயிரிழந்தார்.
கடல்மட்டத்திலிருந்து 5,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள அந்த முகாமை அடைந்த பிறகு, லியூ ஷுயிக் சின்னுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகப் பயண, சாகசத் தகவல்களைப் பகிரும் ‘அட்வென்ச்சர் வில்லேஜ்’ ஃபேஸ்புக் குழுமப் பதிவிலும் சுற்றுலாச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நேப்பாள இணையச் செய்தி ஊடகமான ‘டூரிசம் டைம்ஸ்’ தளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் என்றும் அழைக்கப்படும் 59 வயது திரு லியூ, மருத்துவ உதவி பெறுவதற்காக மற்றவர்களின் துணையுடன் தாழ்வான பகுதிக்கு இறங்கி வந்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார் என்றும் அவருக்கு முதலுதவி அளித்து உயிர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அந்த ஃபேஸ்புக் பதிவும் இணையச் செய்தியும் குறிப்பிட்டுள்ளன.
திங்கட்கிழமையன்று (நவம்பர் 23) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு லியூவின் தங்கை டிரிஸ்ஸி, தம் சகோதரர் அமைதியானவர், அன்பானவர், குடும்பப் பாங்குடையவர் என்று குறிப்பிட்டார். நான்கு உடன்பிறப்புகளில் மூன்றாமவரான திரு லியூவுக்கு, 80 வயதுக்கும் 90 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள பெற்றோர் இருப்பதாக டிரிஸ்ஸி கூறினார்.
மலையேற்றப் பயணங்களில் ஈடுபடுவதோடு கட்டுமானப் பொறியாளராகவும் பணியாற்றிய திரு லியூ, சிங்கப்பூரில் உள்ள ஓர் அறநிறுவனத்தில் துடிப்புடன் தொண்டூழியம் செய்துவந்ததாகவும் வியட்னாமிலும் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் டிரிஸ்ஸி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் நேப்பாளத்தின் மனஸ்லு மலையில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடலைப் பழக்கப்படுத்தும் ஏற்றத்திலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தபோது 50 வயது சிங்கப்பூரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
