நோயாளியின் கண் குழி வழியாக அவரின் மூளைக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் முதல்முறை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
தேசிய நரம்பியல் கழகம், டான் டோக் செங் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த எட்டு மணிநேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
புதுவித நுட்பத்துடன் சிங்கப்பூரில் முதல்முறை கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட அந்த அறுவை சிகிச்சையைப் பெற்ற தியோங் வென் ஹான் எனப்படும் அந்த 38 வயது ஆடவர் மூன்று நாள்களில் வீடுதிரும்பினார்.
2025 அக்டோபர் 9ஆம் தேதி மத்திய விரைவுச்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதால் அவரது கார் விபத்தில் சிக்கியது.
அது பற்றி சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட திரு தியோங்கிற்கு ‘சிடி ஸ்கேன்’ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போதுதான், வலது கண் பின்புறம் மூளையில் 2.5 சென்டிமீட்டர் அளவுக்குக் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மூளையை மூடியிருக்கும் பாதுகாப்புப் படலத்திலிருந்து அந்தக் கட்டி வளர்ந்திருந்தது. ஆபத்துமிக்க ஓரிடம் அது. அதனால், மூளைக்கட்டியை அகற்ற மண்டை ஓட்டின் ஒரு பகுதியைத் திறக்கும் வழக்கமான திறந்தநிலை அணுகுமுறையைக் கையாள்வது கடினம் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருதினர்.
“மூளைக் கட்டி அமைந்திருக்கும் இடத்திற்கு அறுவை சிகிச்சைக் கருவிகளை உட்புகுத்துவது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில், அது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் இருந்தது. அதற்கு மேலாக மூளை அமைந்திருந்தது,” என்று தேசிய நரம்பியல் கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஜென்சன் ஆங் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
திறந்தநிலை அணுகுமுறையைக் கையாண்டால் அறுவை சிகிச்சை நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள தசைகள் மெலிவடைந்து முகச் சமச்சீரற்ற தன்மை உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு வெளியே தெரியும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் விளக்கினார்.
திரு தியோங்கின் மூளைக்கட்டி கண் குழிக்குப் பின்னால் நேருக்கு நேர் அமைந்திருந்ததால், மேலிருந்து உள்ளே செல்வதற்குப் பதிலாக முன்பக்கத்திலிருந்து கட்டியை அணுக முடிவுசெய்யப்பட்டதாகவும் மருத்துவப் பேராசிரியரான திரு ஆங் தெரிவித்தார்.
மண்டை ஓட்டில் கண் கோளத்தை உள்ளடக்கிக் காக்கும் எலும்பு சார்ந்த ஒரு குழியே கண் குழி ஆகும்.

